செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

பசிக்கு மரணத்தையா உண்ணத் தருவது ?

பசிக்கு மரணத்தையா
உண்ணத் தருவது ?
ஆதிவாசி என்றொரு
சொல்லுக்குள் அடங்கி விடுபவனா மது ?
எத்தனை ஆண்டுகாலப் பசியை
எத்தனை ஆண்டுகாலக் கொடுமையை
ஆதிக்கத்தின் ஆணவத்தை
ஒரே பார்வையில் உரக்கச் சொல்லிவிட்டாய் மது
உனது வனத்தைத் திருடிக்கொண்டு
உனது உணவைத் திருடிக்கொண்டு
உனது இருப்பிடத்தைத் திருடிக்கொண்டு
உனது வாழ்வைத் திருடிக்கொண்டு
உனக்குப் பசியைப் பரிசளித்தோம்.
பசிக்கு நீ திருட திரும்ப எப்படி அனுமதிப்போம் ?
ஆனாலும்
உன்னைக் கொல்லும் கணத்தில்
இப்படிப் பார்த்திருக்கக் கூடாது நீ
பார்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
எங்கள் மனசாட்சியை
இப்படி
வெறித்துப் பார்த்து
வெறித்துப் பார்த்து
உலுக்கித் தொலைப்பாயோ ...



செய்தி :

கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள கடுகுமண்ணா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மது (27). அந்தப் பகுதி கடைகளில் புகுந்து திருடியதாக அவர்மீது வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், சமீபத்தில் ஒரு கடையில் நடந்த திருட்டு தொடர்பாகச் சந்தேகப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் காட்டின் உள்சென்று அந்த இளைஞரை சிறைபிடித்ததுடன், அவரை நகர் பகுதிக்கு அழைத்து வந்த பொதுமக்கள் அவரின் உடைமைகளைச் சோதித்தனர். 
ஒருகட்டத்தில் அவரின் கைகளைக் கட்டி அடித்த பொதுமக்கள் பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். காவல்நிலையம் அழைத்து சென்றபோது போலீஸ் வாகனத்தில் இளைஞர் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அவர் பாதியிலேயே உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மதுவை அடித்துக் கொன்றதுடன் அச்சமயம் அதை தற்படம் எடுத்தும் மகிழ்ந்திருக்கிறார்கள் .. கொடுமை


10 கருத்துகள்:

  1. மிகவும் மோசமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்...

    பதிலளிநீக்கு
  2. மனிதனிடம் மனிதம் செத்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  3. மனிதர்க்கு மனிதரே எதிரியாகும் கொடூரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்க்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் பூமிக்கும் மனிதனே எதிரி

      நீக்கு