புதன், 27 ஜூலை, 2016

நெற்றி சுருங்கிய புத்தர் - ஹைக்கூ கவிதைத் தொகுப்பு


தமிழ்க்கவிதை வரலாறு மிக நெடியது. அது கிட்டத்தட்ட தமிழ் மொழியின் வரலாறு. தமிழ் மொழியின் முதல் இலக்கிய வடிவம் கவிதையாகவே இருக்க முடியும். ஒரு வரிக்கவிதையில் அவ்வையும், இருவரிக்கவிதையில் வள்ளுவரும் உலகையே அளந்துவிட்டனர். தமிழ் இலக்கியத்தில் அத்தனை நவீன வடிவத்தையும் முயற்சித்து அறிமுகப்படுத்தியது பாரதி தான். சிறுகதை,புதுக்கவிதை,கட்டுரை,சுயசரிதை என அனைத்தையும் அடியெடுத்துக்கொடுத்தது பாரதிதான். அந்த வகையில் தமிழுக்கு ஹைக்கூவையும் அறிமுகப்படுத்தியதும் பாரதிதான். அவர் அறிமுகப்படுத்திவிட்டுப் போய்விட்டார். நாம் தான் ஹைக்கூவை வாழ(?) வைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஹைக்கூ, மூன்று அடியில் ஒரு மிக அழகிய காட்சியை நம் கண்முன்னால் விரியச் செய்வது. அதுதான் என்னளவில் ஹைக்கூவுக்கு நான் தெரிந்து வைத்திருக்கும் விளக்கம். ஹைக்கூவின் மிக முக்கியப் பாடுபொருள் இயற்கைக்கூறுகள் தாம். இயற்கையின் அழகியலை அப்படியே ஒரு ஓவியத்தைப்போல வரிகளில் பதிவு செய்பவை நல்ல ஹைக்கூக்களாக மிளிர்கின்றன. ஜப்பானிய ஹைக்கூக்கள் ஒரு வரியில் மிளிர்பவை.5-7-5 என்ற அசையில் இருப்பவை என நிறைய விதிமுறைகள் உண்டு. நாம் வசதியாக அவற்றைத் தள்ளிவைத்து விட்டு ஆங்கிலத்தில் ஹைக்கூ எழுதுவது போல மூன்று வரி என்ற விதிமுறையை வகுத்துக்கொண்டோம். அதில் மூன்றாம் வரி ஒரு மின்னல் தெறிப்பாக , ஹைக்கூவின் உயிர்ப்பாக இருக்கலாம் எனவும் வைத்துக்கொண்டோம். மிகக் குறைந்த பட்சம் இந்த விதிமுறைகளுமற்று நாம் எழுதும் ஹைக்கூக்கள் வெறும் செய்திகளாகவும், சொற்றொடற்களாகவும் ஆகி பரிகசிக்கப்படுகின்றன.



நெற்றி சுருங்கிய புத்தர் எனும் தலைப்பில் கவிஞர் மணி சண்முகம் வெளியிட்டிருப்பது இருமொழி ஹைக்கூ தொகுப்பு. தமிழில் தான் எழுதிய ஹைக்கூக்களை தானே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து இருமொழி நூலாக மிக அழகான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளார். டிராட்ஸ்கி மருது அவர்களின் அட்டைப்பட ஓவியம், கு.கவிமணி அவர்களின் உள் ஓவியங்கள் மற்றும் வடிவம் இந்த ஹைக்கூ கவிதைத்தொகுப்பை ஆவி பறக்கும் ஒரு தேநீர்க்கோப்பையாக நமது கைகளில் தருகின்றன.

இருப்பைப் பற்றி எழுதுவதை விடமும் இல்லாமை தான் எழுத்தாகும் போது அழகாகிறது. விஷ்ணுபுரம் சரவணனின் ஒரு கவிதை இருக்கிறது, தரிசாகிப்போன விவசாய நிலத்தைத் தடவிப்பார்க்கிறான் விவசாயி, கருக்கலைந்த பெண் தன் வயிற்றைத் தடவிப்பார்ப்பது போல என. இல்லாதது, இழந்தது எப்போதும் வலியாகிறது.

வீடு திரும்புகையில்
பூக்கூடையென்னவோ காலிதான்
அந்த மணம்..

இந்தக் கவிதையில் கடைசி வரி தருவது நிஜ மணத்தை. பூ சுமந்து வீடு திரும்பும் பூக்காரியின் சித்திரத்தை. மேலும் மூன்றாம் வரியில் ஒரு மின்னல் தெறிப்பென்றெல்லாம் இல்லாமல் அதைக் கட்டுடைத்து கொஞ்சம் நெகிழ்வாய் ஹைக்கூ முடிகிறது.


குழந்தை
வரைந்த மழையில்
குடைக்கு உள்ளேயும் மழை

குழதைகளின் உலகத்தைக் காட்டும் கவிதைகள் நிறைய. இதில் மழையை வரையும் குழந்தை, குடையின் விதிமுறைகளை விட்டு, குடைக்குள்ளும் மழையை பொழியச் செய்கிறது என்பதை அழகாக கவிதையாக்கியுள்ளார்.

அவ்வளவு பெரிய கடல்
சின்னஞ்சிறிய படகு
சின்னஞ்சிறிய அசைவு

நான் ரசித்த ஹைக்கூக்களில் இதுவும் ஒன்று. எந்த நோக்கமுமற்று, ஒரு காட்சியை நம் கண்முன்னால் நிறுத்தும் கவிதை இது. மிகப்பெரிய கடலில் ஒரு சிறிய படகு, அதன் சிறிய அசைவு நம் மனக் கண் முன்னால் காட்சியாகிறது , அது ஒரு அனுபவத்தைத் தருகிறதல்லவா அதுதான் ஹைக்கூ அனுபவம்.

நிலவைக்கடக்க
ஒரு நொடி போதும்
அந்தப் பறவைக்கு

இந்தக் கவிதையைப் படித்ததும் அந்தக் காட்சி நம் கண்களுக்குப் புலப்பட்டுவிடுகின்றது. இது ஒரு ஜென் தத்துவத்தைப்போல மனதில் இறங்குகிறது. ஹைக்கூவுக்கும் ஜென்னுக்கும் தொடர்பிருக்கிறது. எனக்கு பாப்பா ஒரு முறை சொன்னது ஞாபகம் வருகிறது. ஒரு அழைப்பிதழில் பெயர் தவறாக அச்சடித்துவிட்டேன் சே, என்ன செய்வது என்று சொல்கிறேன் உடனே பாப்பா சொல்கிறாள் இதிலென்ன இருக்கு அடிச்சுட்டு மேல எழுத வேண்டியதுதானே என்றாள் சாதாரணமாக. அப்போது உடனிருந்த கவிஞர் கீதாப்ரகாஷ் சொன்னார், இதுதான் பூபாலன் குழந்தைகள் , நமக்கு தான் இது பெருசு, அழைப்பிதழ் தவறானால் அடித்து விட்டு எழுதலாம் என எவ்வளவு பெரிய விசயத்தையும் சாதாரணமாகப் பார்ப்பது குழந்தை மனம். அதுதான் ஜென் மனம். அப்படியாக பெரிய நிலவைக் குறுக்குவெட்டாக எளிதில் பறந்து கடக்கும் பறவையைக் காட்சிப்படுத்தியிருக்கிறது கவிதை.

ஹைக்கூ தத்துவமும் பேசுகிறது என்பது வியப்பு,

எனது முன் இருக்கும் உலகம்
அதில் இல்லை
நான்

நமக்கு முன்னால் இருப்பது நமது உலகம் தான் அதில் நாம் இருக்கிறோமா என்ன ..? இருக்கிறோம் என்கிறது வாழ்க்கை. இருந்தும் இல்லை என்கிறது ஞானம்.

குறிப்பிட்ட ஹைக்கூக்கள் ஒரு பிடி மலர் தான், இந்தத் தொகுப்பில் இருப்பது இன்னும் கூடை நிறைய ஹைக்கூப் பூக்கள்.

மற்ற கவிதைத் தொகுப்புகளைக்காட்டிலும் , வடிவமைப்பிலும், வடிவத்திலும் கூடுதல் சிரத்தையுடன் ஹைக்கூ திகுப்பு இருக்க வேண்டும். அது தரும் மன நிலையுடன் ஹைக்கூவை வாசிப்பது அலாதியான அனுபவம்.

அப்படி வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் சிறப்பான தொகுப்பாக நெற்றி சுருங்கிய புத்தர் ஹைக்கூத் தொகுப்பைத் தந்த கவிஞர் மணி சண்முகம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....




விலை : ரூ 80/-

வெளியீடு : விஜயா பதிப்பகம், கோவை.
தொடர்புக்கு : 0422-2382614


ஆசிரியர் : மணி சண்முகம்

செவ்வாய், 26 ஜூலை, 2016

ஏனென்றால் எனது பிறந்தநாள் ...

ஜூலை 22


ஜூலை 22 இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள் என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தால் கொஞ்சம் மொக்கையாக இருக்கும். எனக்கு ஞாபகமறதி கொஞ்சம் அதிகம்தான் ஆனால் எனது பிறந்தநாளை எப்படி மறக்க முடியும் ?

ஒவ்வொரு வருடமும் பிறந்தநாள் என்பது வழக்கமான நாட்களைவிட கொஞ்சம் வண்ணமயமாக இருக்கும். இது நான் சிறு வயதிலிருந்தே அனுபவிப்பது. இதில் என்ன பெரிய வியப்பு பிறந்தநாள் என்றாலே அப்படித்தானே இருக்கும் என நினைக்கலாம். ஆனால் அதெல்லாம் வசதிபெற்றவர்களுக்குத்தான். நடுத்தரவர்க்கத்துக்கும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கும் பிறந்த நாள் என்பது மற்றுமொரு நாள் தான்.

நான் அதற்கும் கீழ் தான். பெரிய வசதியெல்லாம் இல்லை. ஆனால் வீட்டுக்கு ஒரே பையன். அம்மாவுக்கு நான் உயிர் எல்லாம் இல்லை அதற்கும் மேல் ஏதோ ஒன்று. என்னை இடுப்பிலேயே தூக்கி அலைந்தவள் நான் ஓடத் தொடங்கிய பின்னும். வீட்டில் வறுமை தான் என்றாலும் எந்தப் பண்டிகையை கொண்டாடாவிட்டாலும் என் பிறந்த நாளுக்கு கடன் வாங்கியாவது துணி எடுத்துவிடுவாள் அம்மா. அன்றிலிருந்து இன்று வரை அப்படித்தான். நான் பெரியவன் ஆயிட்டேன் பிறந்த நாளுக்கு புதுத்துணியெல்லாம் வேண்டாம் என்றாலும் பிடிவாதமாக எடுக்கச் சொல்லிவிடுவார்.

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என நினைக்கிறேன். துணி எடுக்க ஒரு வாரம் முன்பு தான் பணம் கிடைக்கிறது. எடுத்து தையல்காரரிடம் தந்தாயிற்று அவர் முந்தின நாள் வரை தரவில்லை நாளை நாளை என்றே தள்ளிப்போட்டு வந்தார். முந்தின நாள் வேலை முடிந்து வந்து அவர் வீட்டுக்குப் போய் அமர்ந்து விட்டார். இப்பவே வேண்டும் என்று. அவரோ எங்கோ அவசரமாகப் போக வேண்டும் காலையில் ஆறு மணிக்கே தந்து விடுவதாக வாக்குக் கொடுத்திருந்தார். காலையில் ஐந்தரைக்கே அம்மா கிளம்பிப் போய்விட்டார் அவரோ தைக்கவே இல்லை. அரை மணிநேரம் அவரிடம் பயங்கரமாக சண்டைக் கட்டிவிட்டு அம்மா வந்து விட்டார். கொஞ்ச நேரத்திலேயே எங்கேயோ போய் பணம் வாங்கிவிட்டு வந்தவர் பொள்ளாச்சி போலாம், அங்க ரெடிமேட் துணி இருக்குமாமா வாங்கி போட்டுட்டு கோயிலுக்குப் போலாம் என்று என்னையும் அப்பாவையும் கிளப்பினார். இந்த முறை புதுத்துணி இல்லாட்டி பரவால்லமா என்றேன் ஆனாலும் கேட்காமல் அழைத்துப்போய், பொள்ளாச்சியில் புதுத்துணி எடுத்து கடையிலேயே மாற்றி , திருமூர்த்திமலை கோயிலுக்கு அழைத்துப்போனார்கள். அதுதான் நான் முதன்முறையாக ரெடிமேட் ஆடை அணிந்தது. இன்னும் அந்த ஆடையின் வண்ணம் உட்பட அனைத்துக் காட்சிகளும் மனதில் இருக்கின்றன. காரணம் அம்மா. அபரிமிதமான அன்பு மட்டுமல்ல, ஆக்ரோஷமான அன்பு அவருடையது. சிறு வயதில் என்னை ஊரில் யாரும் ஒரு வார்த்தை குறை சொல்லி விடக் கூடாது, அவ்வளவுதான் அவர்களுடன் அம்மாவுக்கு அதற்குப்பிறகு ஒட்டுமிருக்காது உறவுமிருக்காது. ஆடி வெள்ளிக்கிழமை தலைச்சன் பிள்ளை ஆண் பிள்ளை பிறந்திருக்கு குடும்பத்தையே ஆட்டம் காணவைக்கும் என்று ஊர்ப்பெண்கள் சொன்னபோது, " ம்க்கும், ஏற்கெனவே ஆடாம நட்டமா நிக்குதாக்கும் " என்று கேட்டு எரிவாள். காங்காரு தன் குட்டியை மடியில் சுமந்தபடியே திரிந்ததைப்போலத்தான் அம்மாவும்.

ஒவ்வொரு வருடமும் அம்மாவிடம் தான் முதல் ஆசி வாங்குவேன். எனது பிறந்தநாளுக்கு முந்தைய தினம் மாலை அம்மாவிடம் செல்கிறேன். கேசரி செய்து வைத்திருந்தார். நான் " என்னம்மா, இன்னிக்கே செஞ்சுட்ட" என்று கேட்கும்போதே,” "என்ன தம்பி,பொறந்த நாளன்னிக்கு ஷேவிங் பண்ணாம,புதுத்துணி போடாம இருக்க ?” என்றார். "அம்மா. நாளைக்குத்தானே ஜூலை22 நாளைக்குத்தான் பிறந்தநாள் " என்றேன்.
இன்னிக்கு ஆடி 6, தமிழ் மாசப்படி இன்னிக்கு தான் உன் பிறந்தநாள் , இங்கிலீஷ் கணக்கெல்லாம் ஆபீஸ்ல கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கறதுக்கு மட்டும் வச்சுக்க, வேணும்னா உன் பிரன்ட்ஸ் இங்கிலீஸ் தேதில வாழ்த்தட்டும் நீ தமிழ்த்தேதிப்படித்தான் கொண்டாடனும் என்றார். நானும் அப்போது தான் பார்த்தேன் தேதியை. " சரிம்மா , அடுத்த வருசத்துல இருந்து சரியா ஞாபகம் வச்சுக்கறேன்" என்று சொல்லிவிட்டு வந்தேன். சரி இந்தவருசம் நாளைக்கு கொண்டாடிக்கோ என்று அனுப்பிவிட்டார். பிறந்தநாளன்று காலையிலேயே போய் அப்பா,அம்மா காலில் விழுந்து ஆசிகளுடன் ஆளுக்கு ஐநூறு பணத்தையும் வாங்கிக்கொண்டு அலுவலகம் கிளம்பிவிட்டேன் அம்மா அப்பாவுக்குத் தெரியாமல் வெளியில் வந்து இன்னும் ஐநூறு தந்தது தனிக்கதை. எப்போதும் இப்படித்தான் தெரிந்து தருவது போக தெரியாமல் இன்னும் கூடுதலாகத் தருவார்.

எனக்கும் அம்மா அப்படித்தான், பாரதிக்கு வாங்கும் அனைத்திலும் அதே பங்கு அளவுக்கு அம்மாவுக்கும் வாங்குவேன். அம்மாவும் எனக்குக் குழந்தை மாதிரித்தான். தேன்மிட்டாய், கடலைமிட்டாய், லாலிபாப்,கேக் என பாப்பாவுக்கு வாங்கும் அனைத்திலும் ஒன்று அம்மாவுக்குத் தருவேன். அவரும் விரும்பி உண்பார்.

இப்படித்தான் துவங்கியது இந்த வருடப் பிறந்தநாள். சரியாகச் சொல்வதானால், ஒரு வாரம் முன்பாகவே பிறந்தநாள் கொண்டாட்டம் துவங்கிவிட்டது. இலக்கிய வட்ட நிகழ்ச்சியிலேயே அபிமதி ஒரு பெரிய பரிசுடன் வந்துவிட்டாள். தான் கைப்பட வரைந்த எனது படத்தை பெரிதாக ஃப்ரேம் செய்து பரிசளித்தாள். பரிசைப் பிரித்துப்பார்க்கும் முன்னரே யூகித்தேன் எனினும் அதைப்பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சி. எனக்கு ஒரு தங்கையோ தம்பியோ இல்லை என்று சிறுவயதில் வெகுசில சமயம் நினைத்துப்பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போதெல்லாம் நிறைய தங்கைகள், தோழிகள்,தோழன்கள், தம்பிகள் கிடைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அனைத்தையும் எனக்குக் கொடுத்தது கவிதையும் அன்பும்தான்.

பிறந்தநாளுக்கு முந்தைய நாளே முகநூலில் வாழ்த்துகள் வரத்துவங்கிவிட்டன. அனைத்துக்கும் அன்று,பிறந்தநாளில்,மற்றும் அடுத்த இரண்டு நாட்கள் வரையிலும் பதில் சொல்லித்தான் முடிந்தது. விரும்பித்தான் இதை அனுமதித்தேன். யாருக்குப் பிறந்தநாள் என்றாலும் தினமும் காலையில் வாழ்த்திவிடுவேன். தினமும் தவறாமல் நான் செய்யும் காரியம் முகநூலில் முதலில் பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்வது. ஊரில் யாராவது குழந்தைகளுக்குப் பிறந்தநாள் என்றால் ஒரு மிட்டாயும், திருக்குறள் புத்தகமும் பரிசளிப்பேன். முன்பெல்லாம் அலுவலகத்தில் என்னோடு வேலை செய்யும் நண்பர்களுக்கு பேனா, சாக்லேட், சட்டை என பரிசுகள் தந்திருக்கிறேன். காரணம் அம்மா.

என்னைப்போலவே, அவர்களது பிறந்தநாள் அவர்களது அம்மாக்களின் பிறந்தநாள் அல்லவா.. ஆகவே தான்.

நள்ளிரவு 12 மணிக்கு மனைவி புத்தாடைகள் பரிசளித்தாள் , அதே நேரத்தில் பாப்பா தானே வாங்கி தானே எழுதி ஒரு வாழ்த்து அட்டையைப் பரிசளித்தாள்... ஆச்சர்யமாக 12 மணிக்கு தம்பி கார்த்தி அழைத்தான், அண்ணா கதவைத்திறங்க வெளியே நிற்கிறேன் என்று. சந்தோசமாகப் போய்த்திறக்கிறேன் கையில் கேக் பெட்டியுடன் நிற்கிறான். 12 மணிக்கு மேல் கேக் வெட்டி கொண்டாடினோம். வாழ்க்கையில் நான் கேக் வெட்டி கொண்டாடுவது இது இரண்டாவது முறைதான். முதல் முறை சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பன் மோகன் நள்ளிரவில் இப்படித்தான் கேக் பெட்டியுடன் வந்து இன்ப அதிர்ச்சி தந்தான். அதன் பின்னர் இப்போதுதான்.



இரவு அழைத்து வாழ்த்து சொன்ன நண்பர்களிடமெல்லாம் பேசிவிட்டு உறங்கும் போது மணி 2.30. காலையில் 6 மணிக்கு எழுந்து அம்மா வீட்டுக்குச் சென்று ஆசி வாங்கிவிட்டு அலுவலகப் பேருந்தை ஓடோடிப்போய்ப் பிடித்தேன். தொடர்ந்தும் அனைத்து நண்பர்களும் அழைத்து வாழ்த்திக்கொண்டே இருந்தார்கள்.

வாட்சப்பிலும் நிறைய நண்பர்கள் எனது புகைப்படத்தைத்தான் வைத்திருந்தார்கள், குழுக்களிலும் அப்படியே. இதெல்லாம் எனக்கே கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. ஆனாலும் அந்த கண நேர அன்பு தரும் மகிழ்ச்சி பல அழுத்தங்களைக் குறைத்து விடுகிறது என்பது தான் உண்மை. வாழ்வின் மீதும், அன்பின் மீதும், அறத்தின் மீதும் ஒரு நம்பிக்கை கிளைக்கிறது.

கார்த்திகா மாலை வரும்போது தான் வேலைசெய்யும் கடைக்கு வந்து போகும் படி சொல்லி இருந்தாள். தூக்கம், மாலை சீக்கிரம் அப்பா,அம்மாவைப் பார்க்கலாம் என்பதாலும் அலுவலகத்திலிருந்து நேரமே கிளம்பி வந்தேன். கார்த்திகா வகை வகையாக நிறைய பேனாக்களைப் பரிசளித்தாள். நிறைய எழுத வேண்டும் என நினைத்திருப்பாள். எனக்கும் பேனாக்கள் மீது எப்போதும் ஒரு கிறக்கம் உண்டு.

வழக்கம் போலவே செந்தில்மாமா, வினோ மேடம், சோலைமாயவன் புத்தகங்களைப் பரிசளித்திருந்தார்கள். ப்ரியா ஒரு பொம்மையும் பரிசளித்திருந்தார்.

குடும்பம், நண்பர்கள், உறவுகள் என அனைவரும் வாழ்த்தினார்கள். முகநூலில் நான் மதிக்கும் பெரிய எழுத்தாளர்கள் உட்பட அனைவரும் வாழ்த்தியது மிக மகிழ்ச்சியானதாக இருந்தது.

அலைபேசியில் வாழ்த்தியவர்கள் அனைவரும் கேட்டது, அப்புறம் இன்னிக்கு என்ன ஸ்பெஷல் என்று தான். அனைவருக்கும் ஒரே பதிலையே சொல்லி இருந்தேன். இன்று மற்றுமொரு நாள்தான் பெரிதாக சிறப்பில்லை என்று. ஆனால் உண்மையில் அது மற்றொரு நாளன்று. நான் எனக்கு எத்தனை உறவுகளின் கரங்கள் இருக்கின்றன பற்றிக்கொள்ள என்று காட்டிய நாள்.

நான் அம்மாவுக்கு எவ்வளவு முக்கியமானவன் என்று உணர வைக்கும் ஒவ்வொரு நாளிலும் இது இன்னும் அழுத்தமான நாள் …

வாழ்த்திய, உடன் இருக்கின்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி











புதன், 20 ஜூலை, 2016

ஒரு டீ சொல்லுங்கள் - இரண்டாம் குவளைத் தேநீர் கொஞ்சம் கூடுதல் கதகதப்புடன்


ஒரு டீ சொல்லுங்கள் - இரண்டாம் குவளைத் தேநீர் கொஞ்சம் கூடுதல் கதகதப்புடன்


கவின் கொண்டு வந்த ஒரு டீ சொல்லுங்கள் நினைவில் இன்னும் இருக்கும் நல்ல சென்ரியூ தொகுப்பு. சில வருட இடைவெளிக்குப் பிறகு இப்போது அதன் இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது ஒரு டீ சொல்லுங்கள் இரண்டாம் குவளை.



எப்போதும் ஒரு பிரதியின் இரண்டாம் பிரதி முதல் பிரதியின் வெற்றியைத் தக்க வைக்குமா என்பது சந்தேகமே. திரைப்படங்கள் பல இரண்டாம் பாகங்கள் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியை கேலி செய்து விடுவது வாடிக்கை. இந்த இரண்டாம் குவளை என்ன செய்திருக்கிறது ?

ராணி நாலா பக்கமும் பறப்பாள்
ராஜா ஒரே எடத்துல இருப்பாரு
மந்திரி சைடு வாங்கியே வருவாரு

- இது வெறும் ட்ரெய்லர் தான் மெயின் பிக்சருக்குள் செல்லலாம்.

சென்ரியூ , உணர்வுகளை நகையுணர்வோடு அதே சமயத்தில் கூர்மையாக நறுக்குத் தெரித்தாற் போல வெளிப்படுத்தும் கவிதை வடிவம். எப்பேர்ப்பட்ட சமூக அரசியல் செயல்பாடுகளையும் எள்ளல் சுவையுடனும் அதே சமயம் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கும் தைரியத்துடனும் வெளிப்படுபவை.சென்ரியூக்கள்.

நம்மவர்களுக்கு ஹைக்கூவுக்கும், சென்ரியூவுக்கும் வித்தியாசம் தெரியவேண்டும். அதற்காக இவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களை இரண்டு பக்கங்களுக்கு அட்டவணை போட்டு எடுத்துக்காட்டுகளுடன் பள்ளிக்குழந்தைகளுக்கான துவக்க நிலைக் கையேடு போல எளிமையாக விளக்கியுள்ளார் கவின். இது அவசியம் தான். சென்ரியூவுக்கும் ஹைக்கூவுக்குமான.வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு நல்ல ஹைக்கூ சென்ரியூக்கள் தர விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல புரிதலைத் தரும்.

தெரியாமல்தான் கேட்கிறேன்
எனத்துவங்கும் பெரும்பான்மையும்
தெரிந்தேதான் கேட்கப்படுகின்றன

ஒரு தத்துவார்த்தமான எள்ளலோடு வெளிப்படும் சென்ரியூ இது. இப்படி நிறைய நகைமுரண்கள் நம் வாழ்வில் உண்டு. இப்படியான நமது அன்றாட வாழ்வின் நகைச்சுவைகளையும் சென்ரியூ பேசும்.

சமூகத்தின் எல்லா அநீதிகளுக்கும் முதலில் குரல் கொடுப்பது அடிமட்டக் குடிமகனாகத்தான் இருப்பான். அவனுக்குத்தான் வாழ்வின் வலி தெரியும். அநீதிகளுக்கு மட்டுமல்லாது எல்லா பேரிடர்களிலும் உன்னிப்பாக கவனித்துப்பார்த்தால் அவர்கள் தான் மிகப்பெரிய மீட்புக் காரியங்களில் ஈடுபட்டு பல உயிர்களைக் காத்திருப்பார்கள். இது நாம் நமது சமகாலத்திலும் கண்ணுற்ற உண்மை. அந்த உண்மையைத்தான் நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல சொல்கிறது இந்த சென்ரியூ ..

கோடீஸ்வரன் கமுக்கமாகத்தான் இருக்கான்
நூறு ரூபாய்கூட இல்லாதவனுக்குத்தான்
தர்மமும் நியாயமும் பெருங்கோபமும்


இலக்கியவாதிகளிடம் காணக்கிடைக்கும் நகைச்சுவைகளை நாம் ரூம் போட்டு விவாதிக்கலாம் சிரிக்கலாம்.நாமும் அதில் ஒரு பாத்திரமல்லவா?

கவிதைப்புத்தகம்
வாசிக்கக் கொடுத்தவுடன்
Font சரியில்லை என்கிறார்கள்

இந்தக்கவிதையை ஒரு குற்றவுணர்ச்சியோடும் நமட்டுச்சிரிப்போடும் தான் கடக்க முடிகிறது.

சென்ரியூவில் சொற்களின் சதிராட்டம் அதன் தன்மைக்குக் கைகொடுக்கும். அவை ஒரு சொல்லில் பல்வேறு பொருள்களுடன் இருக்கும் போது தனிச்சுவையைத் தருகின்றன.

உன்
ஓட்டு
சாவடி

இந்தக் கவிதையில் சாவடி என்பது சிலேடையாக வெளிப்பட்டு இதை சென்ரியூவாக்குகிறது.

பலமுறை, செய்திகளில் விபத்துகள் பற்றிய செய்திகளைப்பார்க்கும் போது நாம் அங்கலாய்க்கும் ஒன்று கடவுளைக் கேள்விக்குறியாக்குவது.

புனித யாத்திரைகளில் இது மாதிரியான விபத்துகள் நடக்கும் போதெல்லாம் கடவுளின் மீதான நம்பிக்கை கொஞ்சம் சிதையும்.

வானவேடிக்கையில் 100 பேர் பலி
அன்புள்ள கடவுள்
நீ இருக்கியா செத்துட்டயா

கடவுளின் இடத்தில் வான வேடிக்கையில் 100 பேர் பலி என்றால் அதில் ஒருவர் கடவுளாகவும் இருக்கலாம் எனும் கேள்வியில் வெளிப்பட்ட சென்ரியூ இது.

இப்படியாக, வேறெங்குமில்லாமல் வாழ்வின் தினங்களிலிருந்து தான் சென்ரியூக்கள் பிற.க்கின்றன. நமது அன்றாட பேச்சுகள், வசனங்கள், அனுபவங்களில் அங்கதம் நிறைந்திருக்கிறது. அதுதான் சென்ரியூ எனும் வடிவமாகிறது.ஹைக்கூ செய்தித் துணுக்காகிவிடும் விபத்தைப்போலவே சென்ரியூ வசனமாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது.

அதைத்தாண்டித்தான் நாம் நல்ல சென்ரியூக்களைப் படிக்கவும் படைக்கவும் வேண்டும்.

இரண்டாம் குவளை ஒரு டீ சொல்லுங்கள் தொகுப்பில் அவற்றை சுவைக்கலாம் ...

ஆசிரியர் : கவின்
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம்
தொடர்புக்கு : 9942050065, 9842426598

செவ்வாய், 12 ஜூலை, 2016

கேக்குறவன் கேனையனா இருந்தா ...

கொலுசு மாத இதழில் வெளியாகும் எனது கட்டுரைத்தொடரான தேநீர் இடைவேள்யின் நான்காம் பகுதி ..

தேநீர் இடைவேளை # 4

கேக்குறவன் கேனையனா இருந்தா ...

நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ படிக்கும் போது என நினைக்கிறேன். வேலைக்கு போய்விட்டு வரும்போது ஆத்தா முந்தானையில் முடிந்தபடி ஒரு மஞ்சள் நிற துண்டுப்பிரசுரத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள். தம்பி இது என்னனு பாரு என்று. நான் படித்துக்காட்டினேன். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் திடீரென இரவில் அம்மன் ஒருவருக்கு அருள் தந்து காட்சி தந்ததாகவும், அம்மனின் சொற்படி அவர் இந்தத் தகவலை நோட்டீஸாக அச்சடித்து ஆயிரம் பேருக்கு விநியோகித்ததாகவும், அன்று முதல் அவருக்கு வாழ்வில் திரும்பிய திசையெங்கும் அதிர்ஷ்டம் என்றும் குறிப்பிட்டிருந்தது.அதுமட்டுமல்ல, இந்த நோட்டீஸைக் கண்டவுடன் மதிக்காமல் அலட்சியம் செய்த ஒரு செல்வந்தன் போண்டியானதாகவும், இதை ஏளனம் செய்த ஒருவன் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்து விட்டதாகவும், எனவே இந்த நோட்டீஸைக் கண்டவுடன் குறைந்தது ஐநூறு பிரதிகளாவது அச்சடிக்க வேண்டும் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இதைப் படித்ததும் ஆத்தா புலம்ப ஆரம்பித்துவிட்டார். என்னடா இது வம்பாப் போச்சு எவனோ குடுத்தான்னு வாங்கிட்டு வந்தேன், வேலில போனத எடுத்து வேட்டில விட்ட கதயா ஆயிடுச்சு என. பிறகு கொஞ்ச நேரத்தில் சமாதானமானவள், அத தூக்கி வீசுடா சாமி வந்துச்சாமா கத சொல்லுச்சாமா என்றாள். ஊரில் நிறைய பேருக்கு அந்த மஞ்சள் காகிதம் போயிருக்கிறது என்பது அடுத்த நாள் பள்ளிக்குப்போன போது தெரிந்தது. ஒரு பையனுடைய வீட்டில் அச்சடத்துத் தரவும் தயாராகிவிட்டார்கள். அப்போது இது பொய் என்று நான் சொன்ன போது, காரணம் கேட்டவர்களிடம் பிரின்டிங் கடைக்காரர்களின் வியாபார யுத்தி என்று நானாக ஒரு காரணம் சொல்லியிருந்தேன். இருக்கவும் செய்யலாம்.

அவ்வப்போது, வெவ்வேறு சாமி பெயர்களுடன், வெவ்வேறு கதைகளுடன் அந்த மஞ்சள் காகிதம் சில வருடங்களுக்கு முன்பு வரைக்கும் வலம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஒரு படத்தில் வடிவேலு சாலையோரத்தில் நடக்கும் மந்திர வித்தைக்காரனிடம் மாட்டிக்கொண்டு பணத்தைப் போடலனா ரத்தம் கக்கிச் சாவாய் என்று அவன் சொல்ல விழிபிதுங்குவாரே அப்படியான வித்தையை நான் சிறு வயதில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஒரு பத்துப்பேர் சுற்றி நிற்கிறோம். அதில் ஒருத்தன் இதெல்லாம் பொய்டா கருமம் இவனுகளுக்கு வேலை இல்லை என்று சொல்கிறான். வித்தைக்காரன் ஜெய் ஜக்கம்மா என்று ஒரு சிலுப்பி சிலுப்பி அவன் மீது திருநீறை வீச அவன் ரத்தம் கக்கியபடி விழுந்துவிட்டான். பிறகு கொஞ்சநேரத்தில் அனைவரிடமும் பண வேட்டை நடத்தி அனைவருக்கும் ஒரு கயிறும் திருநீறும் தந்துவிட்டு அவனை எல்லோர் முன்னாலும் எழுப்பி உன்னை மன்னிச்சு விடறேன் ஓடிப்போயிடு என்று சொல்லி அனுப்பியதை பயந்தபடியே பார்த்திருக்கிறேன். அவர்கள் இருவரையும் சிலநாட்கள் கழித்து ஜோடியாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்று ..

ஆறாவது அறிவை மந்தமாக்கி அதைக் காசாக்கும் இப்படியான முயற்சிகள் தொடர்கின்றன எல்லா காலங்களிலும். இன்றைய காலகட்டம் தொழில்நுட்பத்தில் படுவேகமாக வளர்ந்துவிட்ட காலகட்டமல்லவா..? நமது மூட நம்பிக்கைகளும் அதற்கேற்றாற்போல வளரவேண்டுமல்லவா. நன்றாகவே வளர்ந்திருக்கிறது.

இப்போதெல்லாம் வாட்சப்பில் இந்த மாதிரி மஞ்சள் நோட்டீஸின் நவீனப்பிரதிகள் நிறைய உலவி வருகின்றன. இதை ஷேர் செய்யுங்கள் அதை ஷேர் செய்யுங்கள் என்று. பெருமாள் படத்தை அனுப்பி இதை அடுத்த இரண்டு விநாடிகளுக்குள் பகிருங்கள் என்கிறார்கள். சாய்பாபாவின் ஒரிஜினல் படம் இது இதைத் தொட்டு வணங்கினால் புண்ணியம் என்று ஒரு படத்தை அனுப்புகிறார்கள். ஏசுபிரானின் உருவம் மேகத்தில் தெரிகிறது என்கிறார்கள், நபிகளின் பாதம் இது என்கிறார்கள்... மதமெல்லாம் கணக்கில்லை. எல்லா மதத்தினரும் இந்த வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் இப்படிப் பகிர்பவர்கள் மீது கடும் கோபம் வரும். இப்போதெல்லாம் பரிதாபம் ஏற்படுகிறது.

இதற்கும் இப்படிச் செய்பவர்கள் படிப்பறிவில் குறைந்தவர்களும் அல்லர். மெத்தப்படித்தவர்களும் இப்படியான மூட நம்பிக்கைகளுக்கு மூளையைக் கொடுத்துவிடுகின்றனர் என்பதுதான் வேதனை. சமீப காலங்களாக இந்த மாதிரியான மூட நம்பிக்கைகளும் , வியாபார தந்திரங்களும் பெருகி விட்டன. 5 ஜிபி இலவச இண்டர்நெட் கிடைக்கும் என்று சும்மா ஒரு லிங்க் சுற்றி வருகிறது. அதை நம்மவர்களும் நூறு பேருக்கு கை வலிக்க அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

சாம்சங்க் தொலைக்காட்சி இலவசம் இந்த லிங்கை சொடுக்குங்கள் என்று ஒரு விளம்பரம் வந்தது, நமது ஆட்கள் வரிசை கட்டி அதைப்பகிர்ந்தார்கள். எனக்கே 16 முறை வந்தது. தொடவே இல்லை. அப்படியான ஒரு லிங்கை தொட்ட ஒரு பெண் தோழியின் அலைபேசியில் வைரஸ் புகுந்து அத்தனை தகவல்களையும் அழித்துவிட்டது. நானும் அதை மீட்க என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. பின்பு அவர், சர்வீஸ் சென்டரில் கொடுத்து ஃபார்மேட் செய்து வாங்கிக்கொண்டார். தகவல்கள்,புகைப்படங்கள் அனைத்தும் போனது போனதுதான்.

இந்த நடிகருக்குப் பிறந்தநாள் அதனால் இத்தனை ரூபாய் உங்களுக்கு ஏறும் , இந்தத் தகவலை இந்த லிங்கை எட்டு பேருக்குப் பகிருங்கள் என்று அடிக்கடி வருவதை நீங்களும் பார்த்திருக்கலாம். நடிகர்களுக்கெல்லாம் அல்லது அரசியல்வாதிகளுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா. உங்கள் ஒவ்வொருவர் கணக்குக்கும் பணம் போட்டுதான் பிறந்தநாள் கொண்டாடுவார்களா ..? இதைவிடக் கொடுமை ஒரு நடிகரின் ரசிகன் இப்படி அனுப்ப, இது எங்க நடிகன் அனுப்பினதுடா, அதை எடிட் பண்ணி நீங்க விளம்பரம் பண்றீங்களா என்று ரசிக சிகாமணிகள் சண்டைக்கட்டுவதையும் தலையில் அடித்துக்கொண்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

இதை மட்டுமா பரப்புகிறார்கள், எதெல்லாம் உண்மை என நாம் அவசரத்துக்கு நம்பக்கூடுமோ அதையெல்லாம் பரப்புகிறார்கள். ரத்தம் தேவைப்படுகிறது என்று முதலில் எப்போது வந்தாலும் உயிர் விசயம் ஆயிற்றே என உடனடியாகப் பகிர்ந்துகொண்டிருந்தேன். பிறகு தான் அதிலும் சில விஷமிகள் விளையாடுகிறார்கள் தவறான எண்களைக் கொடுத்து மற்றும் நிறைய பழைய தகவல்களை தேதியின்றி பகிர்கிறார்கள் இதனால கால விரயமும் அலைச்சலும் தான் மிச்சமாவதால் இப்போது கொஞ்சம் உஷாராக இருக்கிறேன்.

சமூக வலைதளங்கள் தரும் சுதந்திரம் அலாதியானது. பெரிய கட்டுப்பாடுகளோ, கண்காணிப்புகளோ இல்லாததால் யாரும் யாரைப்பற்றியும் எதைப்பற்றியும் எளிதில் எழுதிவிட முடிகிறது. சமூகத்தில் ஏதாவது ஒரு துர்நிகழ்வு நிகழ்ந்தால் போதும் ஆளாளுக்கு ஒரு கதை வைத்து எழுதத் தொடங்கிவிடுவார்கள். எது உண்மை எது பொய் என ஆராய்வதெல்லாம் இல்லை. அக்கணத்தில் உணர்வு மேலோங்க உணர்ச்சிவசப்பட்டு பகிர்வதுதான் பிரச்சனை. சுயகட்டுப்பாடும் எதையும் ஆராய்ந்து பகிர்தலும் ஒன்றே தான் இதற்கான தீர்வு. நன்றாக இருக்கும் பெரிய மனிதர்களை ஏதோ பழைய புகைப்படங்களைப் போட்டு இறந்து விட்டதாக எத்தனை முறை பகிரப்பட்டிருக்கும் ? சமீபத்தில் ஐடி துறையைச் சார்ந்த ஸ்வாதியின் கொலை விசயத்திலும் பெரிய மனிதர்கள் உடபட அனைவரும் எத்தனை பேர் எத்தனை தவறான தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள். சில சமயங்களில் எது உண்மையான தகவல் எது பொய்யான தகவல் என்பது கூடத் தெரிவதில்லை.

மூடநம்பிக்கை அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றாலும் தவறான தகவல்களால் நமது அறிவு மழுங்கிக் கொண்டே வருவதும், நமது நேரம் உட்பட அனைவரது நேரமும் விரயமாவதும் பாதிப்பு தானே. பத்து தலை பாம்பு, அனகோன்டா வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்படும் ஆண், சிவலிங்கத்துக்கு பூ போடும் பாம்பு, என போட்டோஷாப்பில் புனையப்பட்ட புகைப்படங்களை எத்தனை பேருக்கு இன்னும் அனுப்பிக் கொண்டே இருக்கிறோம்.

இதற்கெல்லாம் எப்போது முற்றுப்புள்ளி வைப்பது.. ? அது சாத்தியமா..? ஒன்று போனால் ஒன்று புதிய முகமூடியுடன் முளைத்துக்கொண்டே தான் இருக்கும். நாம் தான் நமது ஆறாவது அறிவுக்கண்ணை அகலத் திறந்து வைத்திருக்க வேண்டும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து ஆராய்ந்து நம்பவும் பகிரவும் வேண்டும்... நாம் அறிவாலும் செயலாலும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். இருக்க வேண்டும்...

கொலுசு மின்னிதழில் வாசிக்க

http://kolusu.in/kolusu/z_want_to_see_book.php?parameter=12K19K415