வியாழன், 4 பிப்ரவரி, 2016

பாஷோ - ஹைக்கூ இதழ்

புதன் மாலை, திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் பாஷோ ஹைக்கூ இதழ் வெளியீடு. அழைப்பிதழில் ஆசிரியர் கவின் என் பெயரையும் , பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

பொள்ளாச்சி இலக்கியவட்ட நண்பர்கள் யாரும் வர இயலாததால் நானும் அனாமிகாவும் கிளம்பிப் போனோம்.

 கவின் ஹைக்கூ, சென்ரியு, ஜென் என நல்ல வாசிப்பனுபவமும் புரிதலும் உள்ளவர். அவரது தொகுப்பு ஒரு டீ சொல்லுங்கள் சிறப்பான ஹைக்கூ,சென்ரியு கவிதைகளை உள்ளடக்கியது. தொகுப்பையே கவுண்டமணிக்குத்தான் சமர்ப்பித்திருப்பார். அவரது முன்னெடுப்பில் பாஷோ இதழ் வருவதும் இதில் உலகளாவிய ஹைக்கூக் கவிதைகளை ஒன்றிணைக்க இவர் முயற்சி செய்வதும் பாராட்டுதலுக்குரியது.

புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.  தமுஎகச திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன், லோகநாதன், நாணற்காடன், லெனின், ஜனனன் பிரபு,அனாமிகா,உட்பட பலர் கலந்துகொண்டோம்.



பாஷோ முதல் இதழ் சென்ற ஆண்டு வெளியானது. வடிவமே வித்தியாசமாக, நல்ல ஹைக்கூக் கவிதைகளுடன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது இதழ் இப்போது வெளியாகியிருக்கிறது.

இப்போது வேறு வடிவம். இதுவும் நன்றாக உள்ளது. நல்ல வடிவமைப்பு, ஓவியங்கள், அச்சு அனைத்தும் சிறப்பு.



இந்த இதழ் தொடர்ந்து வெளியானால் மிகச் சிறப்பாக இருக்கும். ஹைக்கூக் கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள். ஹைக்கூவை ஆழமாகப் புரிந்து கொண்டு எழுதினால் மட்டுமே அது நல்ல ஹைக்கூவாக இருக்கும். அல்லது அது ஒரு செய்தித்துளியாகவோ,விடுகதையாகவோ மாறிவிடும் வாய்ப்புகள் உண்டு.

இனி இதழில் வெளியான சில ஹைக்கூக்கள் குறித்து ..

ப்ராங்க்ளின் அற்புதமான கவிஞன், அதை விடவும் அற்புதமான ஒளிப்படக் கலைஞன். இவரது புகைப்படங்கள் கவிதை பேசும். இவரது கவிதைகளின் ஆழம், சொல் தேர்வு, படிமம் அனைத்தும் பிரம்மிப்புக்குள் ஆழ்த்துவன.

                                        கூரைக்குள் நுழையும் வெயிலை
                                        தொட்டு விளையாடுகிறது
                                        குட்டிப் பூனை
                                                       - ஜா.பிராங்க்ளின் குமார்

ஒரு காட்சி தான். அதைக் கவிதையாக்கியிருக்கிறார். அது கவிதைத் தருணம். அந்தத் தருணத்தை எளிமையான சொற்களின் வழியே நமக்கும் கடத்தியிருக்கிறார்.


                                           என்ன சொல்லி அனுப்ப
                                           வீடு வந்திருக்கிறது
                                           விற்ற ஆடு

                                                      - ஏகாதசி


ஏகாதசி அவர்களின் இந்தக் கவிதையின் மூன்றாவது வரி தான் எவ்வளவு வலியை நமக்குள் சொருகி விடுகிறது. மூன்றாவது வரி நிகழ்த்தும் மாயாஜாலம் தான் ஹைக்கூ.

                                            வெயில் விலகிய பின்
                                            செடிக்கே திரும்பியது
                                            அதன் நிழல்


                                           அஸ்தியைக் கரைக்கப்போகிறேன்
                                           இனி கடல்தான்
                                           என் அம்மா

                                                     - அய்யப்ப மாதவன்

கவிஞர் அய்யப்பமாதவனின் நவீன கவிதைகள் மட்டுமல்ல ஹைக்கூ கவிதைகளும் செறிவானவை. முதல் கவிதையில், ஒரு இயற்கைக் காட்சியை கவிதைக் கண்களுடன் கண்டது உணரப்படுகிறது. ஒரு ஆச்சர்யத்தை இந்தக் கவிதை நமக்குள் நிகழ்த்தி விடுகிறது. வெயிலில் தோன்றும் செடியின் நிழல் வெயில் போன பின் எங்கே போகிறது. செடிக்காகத்தானே இருக்க முடியும்.

இரண்டாவது கவிதை துயர்மிகு ஒன்று. சமீபத்தில் தான் கவிஞரது தாயார் காலமானார். அப்போது எழுதியது இது. அம்மா சாம்பலாகிவிட்ட போது . சாம்பலைக் கரைத்த கடலில் தானே அம்மா கரைந்திருப்பார் என உருக வைக்கும் கவிதை. ஹைக்கூவில் அழவும் முடியும் என உணர்த்திய கவிதைகளுள் ஒன்று.

                                             என் பார்வையை
                                             இழுத்துச் செல்கிறது
                                             சுவரேறும் கட்டெறும்பு
                                                              - நாணற்காடன்

அய்யப்பமாதவனின் முதல் கவிதை வாசிப்பனுபவத்தோடு ஒத்துப்போகிற இன்னொரு கவிதை இது. கவிஞர் நாணற்காடன் அவர்களும் ஹைக்கூவை ஆழமாக நேசிப்பவர். இந்தக் கவிதையில் ஊறும் எறும்பைப் பின் தொடரும் நம்மை, நம் பார்வையை மிக அழகான வரிகளாக மாற்றியிருக்கிறார். இரண்டு கவிதைகளையும் மீண்டும் ஒருமுறை வாசிக்கிறேன். இரண்டுக்கும் இடையில் அழகான ஒரு மாய ஒற்றுமை இருப்பதாக நான் உணர்கிறேன்.

                                       கோடு வரைந்து கொள்வேன்
                                       இரவு வானில்
                                       வரிசையாய் மூன்று நட்சத்திரம்
                                                                - பட்டியூர் செந்தில்குமார்

அழகான ஹைக்கூ. ஒரு விளையாட்டுக் குழந்தையின் மனதோடு பார்க்கும் பார்வை இந்தக் கவிதை.இந்த அனுபவமும் மனநிலையும் ஜென் தான்.

                                                  மீன் விற்கப்படுகிறது
                                                 அவ்வப்போது
                                                 தண்ணீர் தெளித்து
                                                               - துரை நந்தகுமார்

ஒரு முரண் இந்தக் கவிதையை நல்ல ஹைக்கூவாக்குகிறது. நீரில் வாழும் மீனை வலை போட்டுப் பிடித்து துடிக்கத் துடிக்க நிலத்தில் கிடத்தப்பட்டு விற்கப்படும் மீன்களின் மேல் நீர் தெளித்து விற்கிறார்கள் என்ற முரணை சொற் கட்டுப்ப்பாடுகளுடன் ஹைக்கூவாக்கியிருப்பது சிறப்பு.

                                    வீட்டில் யாருமில்லை
                                    இரண்டு கோப்பைத் தேநீர்
                                    கலக்கிக் கொண்டிருக்கிறேன்
                                                         - ச.துரை

ச.துரையின் இந்தக் கவிதையின் முதல் வரி, மூன்றாவது வரியாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பான ஹைக்கூவாகியிருக்கக் கூடும். ஆனாலும் என்ன, அது வழக்கம் என நினைத்தாரோ என்னவோ முதல் வரியாக்கியிருப்பினும் ஒரு மென் திடுக்கிடலைத் தந்துவிடுகிறது இக்கவிதை.

                                                  வண்ண மீன் தொட்டி
                                                  உள்ளேயும் வெளியேயும்
                                                  முத்தத் தடங்கள்
                                                                  - வைகறை

வைகறை குறுங்கவிதைகளில் மந்திரங்கள் நிகழ்த்தும் நல்ல கவிஞர். ஹைக்கூ கவிதைகளையும் அதன் விதிமுறைகள் அறிந்து படைக்கும் படைப்பாளி. இந்த ஹைக்கூ தான் பாஷோ இதழில் நான் மிகவும் ரசித்த, மீண்டும் மீண்டும் வாசித்து மகிழ்ந்த ஹைக்கூ. எத்தனை அழகு

இந்த ஹைக்கூவின் உள்முனை ஒரு மீனின் இதழ்கள் என்பதில் மாற்றமில்லை. ஆனால் வெளிமுனையில் யாரையும் பொருத்திக்கொள்ளலாம். நான் ஒரு குழந்தையைப் பொருத்திக் கொள்கிறேன். நானே அக்குழந்தையாகிறேன். என்னுள் ஒரு குதூகலம் பரவுவதை என்னால் அப்பட்டமாக உணர முடிகிறது. இந்த ரசவாதத்தைச் செய்வது தான் நல்ல ஹைக்கூவின் பணி.


                                          அணிலைப் பிடிக்க ஓடும் குழந்தை
                                         அணிலாக்குகிறது
                                         பார்ப்பவர்களை எல்லாம்

                                                      - பா. மீனாட்சி சுந்தரம்

பா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இந்தக் கவிதையும் அழகான குழந்தைக் கவிதை தான். ஹைக்கூவுக்கு சொற்சிக்கனம் அவசியம். அந்த வகையில் எனக்குத் தோதாக இந்தக் கவிதையை நான் இப்படி மாற்றிப் பார்க்கிறேன் எனக்கு அது இன்னும் கூடுதல் அழகாய்த் தெரிகிறது.

                                  அணிலைத் துரத்தும் குழந்தை
                                  அணிலாக்கிவிடுகிறது
                                  பார்ப்பவர்களையும்

கவிஞரின் முன் அனுமதியின்றி கவிதையை மாற்றுவது தவறு தான். என் வாசிப்பின் பொருட்டே நான் இதைச் செய்தேன். கவிஞரே மன்னிக்க.

                                         குட்டிப் பையன்
                                         சிரித்துப் பேசி விளையாடுகிறான்
                                         எனக்குப் புலப்படாத ஒன்றுடன்
                                                                  - தூய்ஷன்

தூய்ஷனின் இந்தக் கவிதையும் ஒரு குழந்தையின் அனுபவத்தைச் சொல்வது தான். குட்டிப் பையன் தனக்குத் தானே பேசிக் கொள்வதைக் கவிதையாக்கும் போது. கடைசி வரியில் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றுடன் என்று எழுதியிருந்தால் இது சாதாரண ஹைக்கூ தான். எனக்குப் புலப்படாத என்ற வார்த்தை இங்கு ஒரு ஜென் நிலையைத் தோற்றுவித்துவிடுகிறது.
குட்டிப்பையன் தனியே பேசவில்லை, அவன் யாருடன் பேசுகிறான் என்பது எனக்குப் புலப்படவில்லை என்று தன்னை ஒப்பிக்கும் இந்த நிலையும் ஜென்.

                                                 காலம் காலமாய்
                                                 சென்று கொண்டிருக்கிறது நதி
                                                 அதே பெயருடன் அங்கேயே இருந்துகொண்டு
                                                                          - மணி சண்முகம்

கவிஞர் மணி சண்முகம் சமீபத்தில் ஹைக்கூ தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். அவரது கவிதைகளில் இருக்கும் அதே அழுத்தமும் அழகும் ஹைக்கூக்களிலும் கை கூடி வந்திருக்கிறது எனலாம். நதியை நீர் எனக் கொண்டால், நாம் பெயர் வைத்திருக்கும் நதி ஒரே இடத்திலா இருக்கிறது ? ஓடிக் கொண்டல்லவா இருக்கிறது. முன்னர் பெயரிட்ட நீர் இப்போது எங்கு இருக்கும் என எப்படி அறிவது.நதியின் பெயரை அந்த இடத்துக்குச் சூட்டியது என எடுத்துக் கொண்டால், அது அங்கேயே இருக்கிறது. வெவ்வேறு சிந்தனைகளைத் தூண்டிவிடக்கூடிய கவிதை இது.

இவை தவிரவும், மொழிபெயர்ப்பு ஹைக்கூக்கள், ஹைக்கூ பற்றிய பத்திகள், என அனைத்துமே சிறப்பு.


ஒரு நல்ல ஹைக்கூத் தொகுப்பைப் படித்த மகிழ்ச்சி. மனம் நிறைந்திருக்கிறது. கவின் ஞாபகப் படுத்தியும், நான் என் கவிதைகளை இம்முறை அனுப்பாமல் விட்டது உறுத்துகிறது. இப்படியான இதழ்களில் கவிதை வருவது கூடுதல் சந்தோசம் தானே ...

தொடர்ந்து அழகழகான இதழ்கள் வர வாழ்த்துகள் நண்பர்களே ...

இதழ் பெற ..

ஆசிரியர் : கவின் நிர்வாக ஆசிரியர் : ஜனனன் பிரபு
வெளியீடு : இடையன் இடைச்சி நூலகம்,பாப்பம்பட்டி, கோவை-16
தொடர்புக்கு : 99420 50065, 98424 26598