வியாழன், 19 நவம்பர், 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டம் 31ஆவது சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 31ஆவது இலக்கிய சந்திப்பு நகரமன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.



இந்த நிகழ்ச்சிக்காகத் திட்டமிட்டது, மூன்று புத்தகங்கள் அறிமுகம் மற்றும் ஜெயந்தன் விருது பெற்ற இளஞ்சேரல் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக முன்னறிவுப்பு எதுவுமின்றி ஒரு நினைவுப்பரிசு தருவது என்பதுதான்.
திட்டமிடாமல் கடைசி நேரத்தில் ப.தியாகுவுக்கு நினைவஞ்சலி செலுத்தும்படி ஆனது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இளஞ்சேரலிடம் முன்பே அவருக்கு சிறப்பு செய்ய வேண்டும் எனக் கேட்டால் நிச்சயம் வேண்டாம் என்று சொல்லுவார். எனவே அவரை எதாவது பேசுவதற்கு அழைத்துவிட்டு அவருக்கு சிறப்பு செய்துவிடலாம் எனத் திட்டமிட்டு, வெங்கட் சாமிநாதன் நினைவுகள் பகிர முடியுமா எனக் கேட்டிருந்தோம். அவரும் சம்மதிக்க, அழைப்பிதல் வடிவமைத்து வைத்திருந்தோம். இடையில் திடீரென கவிஞர் ப.தியாகுவின் மறைவு எங்களை நிலைகுலையச் செய்துவிட்டது. தியாகுவின் மரணச்செய்தி எனக்குத் தகவல் தெரிந்தவுடன் யாழிக்கு சொல்லி இளஞ்சேரலிடம் சொல்லச் சொன்னேன். சற்று நேரம் கழித்து அவரிடம் பேசும் போது மனிதர் உடைந்து போய் பேசினார். "என்ன சொல்றதுனு தெரியல பூபாலன், என்னால பேச முடியல நான் கொஞ்சம் ஆசுவாசமாயிட்டுப் பேசறேன்" என்றார். அன்று தியாகுவின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வரும் வழியில் உக்கடத்தில் அவரைப் பார்த்த போதும் மிகவும் வருத்தமாக இருந்தது. எங்கள் யாரைவிடவும் இளஞ்சேரல், இளவேனில் அவர்களுக்கு தியாகுவின் இழப்பு கூடுதல் வலி என்பதை அறிந்திருந்தேன். அப்போதும் அதிகம் எதுவும் பேசிக்கொள்ளாமல் கிளம்பிவிட்டோம்.

சில நாட்கள் கழித்து இளஞ்சேரல் அவர்களிடம் நிகழ்ச்சிக்கு வர முடியுமா என்று கேட்கலாமென்று அழைத்தேன். அழைத்து வெங்கட் சாமிநாதன் நினைவலைகளுடன் தியாகுவின் நினைவுகளைப்பற்றிப் பேசிவிட முடியுமா அழைப்பிதழில் போட்டு விடட்டுமா என்று கேட்டேன். காரணம் நிகழ்ச்சிக்கு முந்தைய தினம் தான் பொள்ளாச்சி த.மு.எ.க.ச கூட்டத்தில் தியாகுவுக்கான நினைவேந்தல் உரையை நான் பேசுவதாக ஒப்புக்கொண்டிருந்தேன். நமது நிகழ்ச்சியிலும் நாமே பேச வேண்டாம் என்று அவரிடம் கேட்டேன். அவரோ " இல்லை பூபாலன், வெங்கட் சாமிநாதன் பற்றி மட்டும் பேசுகிறேன். தியாகுவை அப்படி எங்களால் நினைக்க முடியவில்லை. அவரைப்பற்றிப் பேச முடியாது. அவர் நம்மோடுதானே இருக்கிறார்.” என்றார். மிகவும் வருத்தமாக இருந்தது. சரி வெங்கட் சாமிநாதனைப்பற்றி மட்டும் பேசுங்கள் என்று சொன்னேன். நிச்சயம் வந்துவிடுவேன் என்றார். இன்று வரைக்கும் தன்னோடு தியாகு இருப்பதாகத்தான் அவர் செய்திகளை முகநூலில் பதிந்து வருகிறார். காலம் தான் அவரது மனக்கவலையை ஆற்றும்.


நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளோடு புன்னகை இதழ் வேலையும் சேர்ந்து கொண்டதால் இன்னும் கூடுதல் சுமையாகிப்போனது. கடைசி நேரத்தில் இதழை அவசர அவசரமாகத் தயாரித்ததாலும், நேரமின்மையாலும் இந்த இதழ் நாங்கள் நினைத்த அளவுக்கு வரவில்லை. அடுத்த இதழ் வடிவமைப்பிலும் அச்சிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வெளியிடவேண்டிய இதழ் சனிக்கிழமை இரவுதான் அதுவும் 50 இதழ்கள் தான் கைக்குக் கிடைக்கின்றன. அருவி இதழும் அறிமுகம் செய்ய வேண்டும். அந்த இதழும் குறைந்த அளவே கைக்குக் கிடைத்தன. ஒரு வழியாக இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து, பள்ளிக்குச் சென்று பார்த்தால் வழக்கமாக நிகழ்ச்சி நடத்துமறியில் சிமென்ட் மூட்டைகள் நிரம்பிக்கிடக்கின்றன. இனி ஒரு வகுப்பறையைத் தேர்வு செய்து, சுத்தம் செய்து. இருக்கைகள் எடுத்துப்போட்டு ஸ்ஸ்ஸ்ஸப்பா...
சோர்ந்து போய் என்ன ஆவது. நானும் சோலை மாயவன் இருவர் தான் இருக்கிறோம். மளமளவென்று வேலைகளில் இறங்கினோ. இருக்கைகளை எடுத்துப்போட்டு சுத்தம் செய்துவிட்டு, ஃபிளெக்ஸ் அடித்துவிட்டார்களா என்று பார்த்து அதைப்போய் வாங்கி வந்து மாட்டி சரிசெய்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினோம். அப்போதுதான் நினைவுக்கு வந்தது அன்று கம்பன் கழக நிகழ்ச்சி நடப்பது. அங்கும் சென்று தலைகாட்டிவிட்டு, அழைப்பிதழ்கள் தந்துவிட்டுக் கிளம்பினோம். நான் வீடுவர 10 மணியாகிவிட்டது. சோலை மாயவன் வரும் விருந்தினர்களை வரவேற்று அறையில் தங்க வைத்துவிடுவார். தேவதாஸ் அய்யா இரவு ஒரு மணிக்கும் ஸ்ரீதர் பாரதி 3 மணிக்கும் வந்தார்கள். சோலை அவர்களை பேருந்து நிலையம் சென்று அழைத்துவந்து தங்கவைத்தார்.

காலையில் வழக்கம்போல 8 மணிக்கெல்லாம் அரங்கம் வந்து சேர்ந்தோம் நானும் தம்பி கார்த்தியும். மீண்டும் இருக்கைகளைச் சுத்தம் செய்துவிட்டு, சுக்குக் காபி கொண்டுவரும் அண்ணனுக்கு அழைத்து நினைவு படுத்திவிட்டுக் காத்திருந்தோம்.

ஒவ்வொருவராக வந்து சேர, நிகழ்ச்சி ஆரம்பமானது. படித்ததில் பிடித்தது முதல் நிகழ்வு. தாங்கள் படித்ததை பார்த்ததைப் பகிர்ந்து கொண்டனர். சோலைமாயவன் குட்டி ரேவதியின் கவிதையைப் பகிர்ந்து கொண்டார். கிருத்திகா கைக்குழந்தைகளையும் பிச்சையெடுக்க வைக்கும் நிகழ்வைப் பற்றிப் பேச அதையொட்டியே தனது அனுபவத்தை கார்த்திகேயன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். இன்னும் சிலரும் படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொண்டனர்.

நான் வரவேற்புரை நிகழ்த்தினேன். மறைந்த நண்பர் கோவை இளம் கவிஞர் ப.தியாகுவுக்கு நிகழ்வில் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அடுத்து கவிஞர்களால் புகழஞ்சலியில் மெளனம் ரமேசு,யோகா, அனாமிகா உள்ளிட்டோர் தியாகுவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கவிஞர் பாலா எழுதிய 'முனியமரம்" - கவிதைத் தொகுப்பினை
அறவொளி அறிமுகம் செய்து வைத்தார். கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததாலும், வாகன ஓட்டி வராததாலும் நிகழ்வுக்கு பாலாவால் வர இயலவில்லை. அறவொளி அவர்கள் முதன் முறையாக ஒரு நூல் குறித்துப் பேசினார். இருப்பினும் முனியமரம் கவிதைத் தொகுப்பை அழகாக அறிமுகப்படுத்திப் பேசினார்.

.
எழுத்தாளர் சா.தேவதாஸ் மொழிபெயர்த்த
"சூதாடியும் தெய்வங்களும்" - வாய்மொழிக் கதைகளின் சேகரம் நூலை
எழுத்தாளர் இரா.முருகவேள் அவர்கள் அறிமுகம் செய்துவைத்துப் பேசினார். முருகவேள் தனது உரையில் மொழிபெயர்ப்பு என்பது கத்தியின் மேல் நடப்பது போன்ற ஒரு கலை, மூல நூலின் தன்மையும் கெடாமல் நமது மொழியின் சுவையையும் சேர்த்துத் தருவதாக இருக்க வேண்டும். சா.தேவதாஸ் அவர்கள் அதை திறம்பட செய்திருக்கிறார். இன்னும் பல முக்கியமான உலக இலக்கியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று பேசினார். தனக்கு விருப்பமான ஒரு நூல் இன்னும் மொழிபெயர்க்கப்படாமல் இருக்கிறது என்று அவர் சொல்ல தேவதாஸ் அவர்கள் அதைக் குறித்துவைத்துக் கொண்டார். எங்கோ தொடங்கி, புத்தகத்துக்குள் நுழைந்து, சரியான பாதையில் பயணித்து என விஸ்தாரமான பேச்சு தோழர் முருகவேள் அவர்களுடையது.

பின்னர் ஏற்புரையில் சா.தேவதாஸ் அவர்கள் பேசுகையில் உலகம் முழுவதும் உள்ள நாட்டார் இலக்கியங்கள் மிக முக்கியமான ஆவணங்கள். அவர்களின் கதைகள் வெறும் புனைவுகள் அல்ல. அவை காலத்தின் சாட்சியங்கள். நாம் இப்போது நவீனம், நாகரீகம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்தையும் ஆண் பெண் உறவு உட்பட நாட்டார் கதைகளில் மிக அழகாக நுட்பமாகச் சொல்லப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்று பேசினார்.



 கவிஞர் ஸ்ரீதர் பாரதி எழுதிய " செவ்வந்திகளை அன்பளிப்பவன் "கவிதைத் தொகுப்பினை நான் அறிமுகம் செய்து பேசினேன். மண்மணம் கமழும் அவரது கவிதைகள் மிகவும் நெருக்கமான உணர்வைத் தந்தன. சமீபத்தில் வாசித்த நல்ல தொகுப்புகளில் ஒன்று. தொகுப்பைப்பற்றிப் பேசிவிட்டு, இந்தத் தொகுப்புக்கு அட்டை வடிவமைப்பு ப.தியாகு. அநேகமாய் தியாகு வடிவமைத்த கடைசி அட்டைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்றும், மேலும் சில நினைவுகளையும் பேசிவிட்டு அமர்ந்தேன். இது ஸ்ரீதர் பாரதியை பாதித்துவிட்டது போலும், ஏற்புரைக்கு அழைத்தவுடன் வந்து அனைவருக்கும் நன்றி என்று மட்டும் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். பேசும் மனநிலையில் இல்லை நீங்கள் ஏதேதோ நினைவுகளைக் கிளப்பிவிட்டுவிட்டீர்கள் என்றார்.


கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் நினைவலைகளை எழுத்தாளார் இளஞ்சேரல்பகிர்ந்து கொண்டார். வெங்கட் சாமிநாதன் ஒரு கறாரான விமர்சகர். எதையும் வெளிப்படையாக நறுக்குத் தெரித்தாற்போல சொல்லிவிடக் கூடியவர். ஆனால் அவர் வெறும் விமர்சகர் மட்டுமல்ல ஒரு நல்ல படைப்பாளி என்றும் அவரது படைப்புகள் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

இளஞ்சேரல் அவர்கள், கருடகம்பம் நாவலுக்காக ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது பெற்றமைக்காக அவருக்கு பட்டயமும் பொன்னாடையும் அளித்து கெளரவிக்கப்பட்டது.


புன்னகை கவிதை இதழ் - 75 ஆவது இதழ் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் வெளியிட விசாகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.



அருவி இதழ் அறிமுகம் கவிஞர் க.அம்சப்ரியா செய்துவைத்தார். கவிதை மற்றும் கவிஞனின் தேவை பற்றித் தொடங்கி அருவியின் கவிதைகளை அறிமுகம் செய்து, கவிஞர்களை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என தியாகுவின் நினைவுகளோடு முடித்துக் கொண்டார். நானும் அருவியின் கவிதைகளையும் காவனூர் சீனிவாசன் அய்யா அவர்களின் முயற்சியையும் இன்னும் கொஞ்சம் அறிமுகம் செய்து வைத்தேன்.

அதன் பின்னர் கவியரங்கம். 15 கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கவிஞர் க.அம்சப்ரியா அவர்கள் நன்றியுரையுடன் விடை பெற்றோம்.

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தில் வெளியிடப்பட்ட செய்திமடல் உங்கள் பார்வைக்காக ...

https://www.dropbox.com/s/da5b612b0csp6fe/Seythimadal%2022.pdf?dl=0