புதன், 30 செப்டம்பர், 2015

முகநூல் தமிழ்



கற்காலம் தொட்டு கணினிக் காலம் வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றாற்போல தன்னைப் புதுப்பித்துக் கொண்டு என்றும் மாறா இளமையுடன் இருக்கும் மொழி நம் தாய்த் தமிழ் தான். மற்ற மொழிகளுக்கெல்லாம் நூற்றாண்டு வரலாறு தான். நமது மொழிக்குத்தான் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வரலாறு. அதுவும் இன்னும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை; தோண்டத் தோண்ட பத்தாயிரம் ஆண்டுகளின் வரலாற்றை இந்த நிலமெங்கிலும் நிறைத்துப் புதைந்து கிடக்கிறது இன்னும். ஓலைச் சுவடிகளில் எழுதிய விரல்கள் இப்போது தொடு திரையிலும் தமிழிலியே எழுதுவது வியக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கிறது.

கணினியும் இணையமும் மிகப்பெரிய கடலெனப் பரவிக்கிடக்கிறது. இதில் தமிழின் பயன்பாடு பற்றியும் உள்ளீடுகளைப் பற்றியும் பேச விஸ்தாரமான அறிவு வேண்டும். நான் இங்கு சொல்ல விரும்புவது நாம் அன்றாடம் மூழ்கிக் கிடக்கும் முகநூலில் தமிழின் பயன்பாடுகள் பற்றி.

ஃபேஸ்புக் என்பது பெயர்ச்சொல் , மார்க் ஜூகர்பர்க் என்ற வெள்ளைக்காரன் கண்டுபிடித்தது அதை முகநூல் என்று தமிழ்ப்படுத்துவது தவறு என்ற ஐயத்திலேயே இருந்தேன். அப்படிப்பார்த்து நாம் தயங்கி இருந்தால், தொலைக்காட்சி, தொலைபேசி, அலைபேசி, மின்னஞ்சல் போன்ற வார்த்தைகளே நமக்குக் கிடைத்திருக்காது.

இதுபோன்ற அத்தியாவசியமான மற்றும் கலைச் சொற்களை நாம் உருவாக்கிக் கொள்ளத்தான் வேண்டும். தொழில்நுட்பம் வளர வளர ஒரு மொழி தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். மொழியை வளப்படுத்தவும் வாழவைக்கவும் இது ஒரு அடிப்படைத் தேவையாகவே இருக்கிறது.

முகநூல் தமிழ் :

முகநூலில் தமிழ் பயன்பாடு எவ்வாறு இருக்கிறது அதன் சாதக பாதகங்களைப் பார்க்கலாம்.

முகநூலில் எனக்கு மிகக் குறைந்த நண்பர்களே இருக்கிறார்கள் அவர்களில் தமிழில் தொடர்ந்து எழுதுபவர்களைப் பற்றியும் , தமிழ் மொழியை புதிய தொழில்நுட்பத்திலும் சிறப்பாகக் கையாளுபவர்களையும் பற்றி சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன்.

அதிகம் கவிதைகளின் பால் நேசம் கொண்டவனென்பதால் என் முகநூல் நண்பர்கள் அனைவரும் கவிஞர்களாகவே இருக்கிறார்கள். அதுவும் கவிதை மொழியின் உச்சத்தில் உலவுபவர்கள் என் நட்புவட்டத்தில் இருப்பது எனக்குக் கூடுதல் பெருமையானதாக இருக்கிறது. அவர்களில் கவிதைகளைத் தாண்டியும் மொழிக்கான தங்களது பங்களிப்புகளை பதிவுகளாகச் செய்யும் ஓரிருவரையும் அவரது பதிவையும் சொல்ல விழைகிறேன்.


கவிஞர் மகுடேஸ்வரன் :

முதலில் எனது நட்பு வட்டத்தில் இருக்கும் கவிஞர் மகுடேஸ்வரனைப் பற்றிப் பேச வேண்டும். இவர் திருப்பூர்க் காரர். திருப்பூர் மக்களின் பிரதானத் தொழிலான பின்னலாடைத் தொழில் நிறுவனத்தில் உயர்பதவியிலிருப்பவர்.
அதுவல்ல அவர் சிறப்பு. அவர் ஒரு அற்புதமான கவிஞர்.

பலமுறை எழுத்தாளர் சுஜாதா உட்பட பல ஆளுமைகளால் பாராட்டப்பட்ட பல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். அவரது முகநூல் தளத்துக்கு சென்று பாருங்கள். கவிதைகள், தனது அனுபவங்கள் தாண்டி முகநூலில் மிக முக்கியப் பணியை அவர் செய்து கொண்டிருக்கிறார். அது தமிழைக் கற்றுத்தருவது.

பல தமிழ் வார்த்தைகளைப் புரிய வைத்தல், காலம் காலமாக நாம் தப்பும் தவறுமாக எழுதி வரும் வழக்கைத் தவறென தெளிய வைத்தல், பல வேற்று மொழி வார்த்தைகளுக்கு சரியான தமிழ் கலைச் சொற்களை அறிமுகப்படுத்துதல் என முகநூலை, தமிழ் வளர்க்கும் கருவியாக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.


அவருடைய ஒரு பதிவு :

எந்தன் உந்தன் என்றெழுதக் கூடாது.
என்றன் உன்றன் என்றுதான் எழுதவேண்டும்.
என்+தன் = என்றன்
உன்+தன் = உன்றன்
பலரும் ‘எந்தன், உந்தன்’ என்றே எழுதுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் திரைப்பாட்டு எழுதியவர்கள் இசையில் உட்கார வேண்டும் என்று கருதி ‘எந்தன், உந்தன்’ என்றெழுதிவிட்டார்கள். பேச்சு வழக்கில்கூட கொச்சையாக ‘எந்தன் உந்தன்’ என்பதில்லை நாம். வியப்பாக இருக்கிறதா ? பேச்சு வழக்கில் மக்கள் என்றன் உன்றனைப் பயன்படுத்துகிறார்களா ? ஆம். பயன்படுத்துகிறார்கள். கோவைத் தமிழை நினைவுகூட்டிப் பாருங்கள்.
என்ற பேச்சக் கேட்பியா மாட்டயா ?’
உன்ற அழும்புக்கு அளவேயில்ல போ’
என்ற பொழப்பு இப்படியாகிப் போச்சே...’
உன்ற காட்டுல நல்ல விளைச்சல்தான்...’
இதில் உள்ள என்ற உன்ற - என்றன் உன்றன் தான் ! மக்கள்கூட என்றன் உன்றன் என்னும்போது, எழுதுகிறவர்கள் அறியாமல் தவறாக எழுதுகிறார்கள்.
பேச்சுத் தமிழில் இவ்வாறு ஏராளமான அருஞ்சொற்களும் தூய வழக்குச் சொற்களும் நாமறியாதபடி கலந்திருக்கின்றன.


புல் பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசும்புல்.
கிளி பச்சையாக இருக்கிறது. எப்படிச் சொல்கிறோம் ? பசுங்கிளி.
நெற்கதிர் முற்றாமல் பச்சையாக இருந்தால் பசுங்கதிர்.
பச்சைப்புற்கள் மூடிய தரை பசுந்தரை.
உருக்கிக் கலக்காத தூய்மையான பத்தரை மாற்றுத் தங்கம் பசும்பொன்.
ஆனால், பசு தரும் பாலை எப்படிச் சொல்கிறோம் ? பசும்பால்.
இது தவறு. காய்ச்சப்படாத பச்சைப் பாலைத்தான் பசும்பால் என்று சொல்லவேண்டும். சற்றுமுன் கறந்த தூய்மையான பால் என்ற பொருளிலும் பசும்பால் என்று சொல்லலாம், பசும்பொன் என்பதைப்போல. ஆனால், பசும்பால் என்பது பசுவின் பால் என்ற பொருளைத் தராது.
பசுவிடம் கறந்த பால் என்பதைச் சொல்ல பசுப்பால் எனல் வேண்டும். பசுவின்கண் கறந்த பால் - ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை !
ஆக, பசும்பால் வேறு ! பசுப்பால் வேறு !

இப்படியான நுணுக்கமான தமிழ் சொற்களையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்துகிறார். இப்படியொரு தமிழ் ஆசான் நாம் கண்ணால் பார்க்காமலேயே , கட்டணம் இல்லாமலேயே கற்றுத் தருபவர் கிடைப்பாரா.?

தமிழில் அறிவியல் தகவல்களும், தமிழிலேயே தொழில்நுட்பங்களை எழுதுபவர்களும் மிகக் குறைவு. அதில் நான் பின் தொடரும் ஒரு பக்கம் அறிவுடோஸ் :


நாம் அழுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பெரும்பாலான காரணங்கள் வெற்றி கிடைத்த மகிழ்ச்சி, வலி, பிறர் பிரிந்து செல்லுதல், வலுவிழந்த தன்மை போன்றவை தான். வேர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பிகள் போல கண்ணீருக்கும் அழுகை சுரப்பிகள் என நமது கண்களில் உண்டு. உணர்ச்சியால் அழும்போதும், வலியால் அழும்போதும் இந்த சுரப்பிகள் ஒரே மாதிரிதான் செயல்படும்.

மற்ற சுரப்பிகள் போலவே இவையும் நமது இரத்த ஓட்டத்துடன் இணைந்துள்ளன. நமது கண்ணீரில் உள்ள ஒரு சில பொருட்கள் இரத்தத்திலிருந்து வருகின்றன. இந்த இரத்தத்தில் இருந்து பொருட்கள் கண்ணீரில் கலக்கும் விகிதம் சில ஹார்மோன்களினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாடுதான் நாம் வலியினை உணரும் போதும், உணர்ச்சியில் அழும்போதும் என வெவ்வேறாக இருக்கிறது. எனவே நாம் அழும் நிலைகள் வெவ்வேறானது தான்.

30 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அமெரிக்க ஆராய்ச்சியாளர் உணர்ச்சிமிக்க அழுகை மற்றும் சாதாரண வெங்காயத்தினால் ஏற்படும் அழுகை என இரண்டு அழுகைகளிலும் கிடைத்த கண்ணீரை ஆராய்ந்தார். இதில் உணர்ச்சிமிக்க அழுகையில் கிடைத்த கண்ணீரில் புரதங்கள் அதிகம் என்பது கண்டறியப்பட்டது.

பாதகங்களையும் பார்த்துவிடலாம் :

எந்தத் தொழில் நுட்பமும் அது கண்டறியப்படும் நோக்கத்தைக் கடந்து தவறான நோக்கங்களுக்கும் பயனாகிப்போவது விதி. இதற்கு முகநூலும் விதிவிலக்கல்ல. மொழியை வளர்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கும் முகநூல்தான் மொழியைச் சிதைக்கும் பணியையும் செய்துகொண்டிருக்கிறது. முகநூலை, நூல்பிடிப்பதற்கும், ஆள் பிடிப்பதற்கும் அரசியல் செய்வதற்கும் பயன்படுத்துவோரும் இருப்பதால் இது நடந்தே விடுகிறது.

மிகச் சிலரே தமிழில் பிழையின்றி எழுதுகிறார்கள். தப்பும் தவறுமாக தமிழில் எழுதுவது முகநூலில் அதிகம். அதைப் பார்க்கும் போதெல்லாம் சுட்டிக் காட்டுங்கள்.

என்ன தான் முகநூலில் தமிழில் எழுதினாலும் முகநூல் வெளிநாட்டுத் தயாரிப்பு என்பதால் அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களும் தமிழில் இல்லை. எதிர்காலத்தில் வரும் என நம்பலாம்.

எந்தக் கருவியாயிருந்தாலும் அதை ஆக்கவோ, அழிக்கவோ பயன்படுத்துவது நம் கைகளில் தான் உள்ளது.

முகநூல் மட்டுமல்லாது இணையத்தை மொத்தமாக நமது அறிவு வளர்ச்சிக்கும், மொழி வளர்ச்சிக்கும் பயன்படுத்துவோமாக.

______________


இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகை : 1

மனசாட்சியின் கதறல்

ஓயாது பெருங்குரலெடுத்து
ஓலமிட்டுக் கொண்டே
அலையும் இந்த
மனசாட்சியை
அடக்கவோ, திசை திருப்பவோ
எடுத்த பிரயத்தனங்கள்
பொய்த்துப்போக,

அணுகுண்டைப் போல
எப்போது வேண்டுமானாலும்
வெடித்து விடக்கூடிய
அபாயம் நிறைந்த
மனசாட்சியை ஒரு
காலி மதுக்குடுவையிலடைத்து
கடலில் வீசியெறிந்தேன்
முன்பொரு நாள்.

சில காலம் கழித்து
அந்தக் குடுவையை
கரையோரம் கண்டெடுத்தவர்கள்
அதிர்ச்சியுடன்
திருப்பித் தந்தார்கள்

குருதிக்கறை தோய்ந்த அது
கதறிக் கொண்டேயிருக்கிறது இன்னும்

_________

இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை ; எண் : 4

கோமாதாக் கொலைகள்

பெற்ற பிள்ளையைப்
போல வளர்ப்பதாகச்
சொன்னீர்கள்.

பொங்கலுக்கு அதை
அழகாக்கி
கோமாதா வெனத்
தொழுது மகிழ்ந்தீர்கள்.

கன்றுக் குட்டிகளையும்
கறந்த பாலையும்
வரவுக் கணக்கில்
எழுதி வைத்தீர்கள்.

ஒரு படி அதிகம்
கறக்கும்
நாட்களிலெல்லாம்
மகாலட்சுமி என்று
புளகாங்கிதம் அடைந்தீர்கள்.

நேற்றைக்கு முந்தைய
தினம் அதை
லாரியில் வலுக்கட்டாயமாக
ஏற்றிவிட்டு
முகத்தைத் திருப்பிக் கொண்டீர்கள்.



_________

இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை ; எண் : 4

தமிழ்ப் பாடம் தேவை தமிழன் பாடம்

நமது சூரியன்கள்
நமக்கு முன்னரே உறங்கச்
சென்று விடுகின்றன.

நமது ஆயுதங்கள்
துருப்பிடிக்கலாயின.

நமது படைகள்
போர்த் தொழில்
மறந்துவிட்டிருக்கிறார்கள்.

நமது ஊர் அமைதியின்
பக்கம் சாய்ந்துவிடவில்லை.

நாம் தான்
முழங்காலிட்டும்,
முனகிக் கொண்டும்
கையேந்தியுமே
வாழ்வதற்குப்
பழக்கப்பட்டுவிட்டோம்.

வாழ்வை வரலாறாக்கி வாழ்ந்த
பாட்டன் தமிழனின்
மிச்ச ரத்தம்தான்
இப்போது நீர்த்துவிட்டதென
சொல்லக் கூசுகிறது.

ஊரார் பெருமை பேசியது போதும்
இனியேனும் வகுப்பெடுங்கள்
தமிழ்ப்பிள்ளைகளுக்கு
தமிழன் பெருமைகளை.

____
இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை எண் : 4

பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

இப்போது எதுவுமே
இல்லை அவ்வீதிகளில்.

சிதிலமடைந்து துளைத்த
குண்டுகளின் அடையாளங்களுடன்
நிற்கும் வீடுகள்
நாளை சரித்திரக்
கதைகளுக்கு சான்றாகலாம்.

நிசப்தம் மட்டுமே
நிலவியிருக்கும்
முன்பு ஊராயிருந்த
அவ்வூர் இனி
மயானமாக உபயோகப்படலாம்.

தெருவெங்கும் இலக்கியமாகவும்
கவிதையாகவும் மணந்த
மூவாயிரமாண்டு மூத்தமொழி
எதிர்காலத்தில்
தொல்பொருள் துறையால்
தோண்டியெடுக்கப்படலாம்.

ரத்தமும் , கண்ணீரும்
இன்னும் ஈரம் காயாமலிருக்கும்
பதுங்கு குழியின் ஆழத்திலிருந்து
இப்போதும்
துளிர்க்கிறது ஒரு செடி.

நாளைகளின் மீது
நம்பிக்கையுடன்...


_________________________


இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : புதுக்கவிதை ; எண் : 4

வலசைக்கு வந்த பறவையின் பெயர் தெரியுமா ..?


பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் பேசும் போது சூழலியல் ஆர்வலர் முகமது அலி அவர்களின் ஒரு பதிவு விவாதப் பொருளானது. அதைப்பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன்.

சூழலியல் ஆர்வலர் முகமது அலி அவர்கள் பேசும் போது, சூழலியல் குறித்த பிரக்ஞை இலக்கியவாதிகளுக்கு இல்லை. நீங்கள் கவிதைகள் படைக்கிறீர்கள், இலக்கியம் படைக்கிறீர்கள் ஆனால் அறிவியல் அறிந்து கொள்வதில்லை. உங்கள் ஊர் குளத்துக்கே சைபீரியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக பறவைகள் வருகின்றனவே நீங்கள் போய்ப் பார்த்திருக்கிறீர்களா அவற்றின் பேர் தெரியுமா. நாங்கள் எங்கிருந்தோ இங்கு வந்து பார்க்கிறோம். நீங்கள் பார்க்கிறீர்களா என்றெல்லாம் பேசினார்.

ஒரு விதத்தில் அவருடன் உடன் படுகிறேன். சூழலியல் குறித்த பிரக்ஞை, அறிவு, விழிப்புணர்வு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அவசியம். அதிலும் இலக்கியவாதிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக அத்தியாவசியம். மாறிவரும் தட்பவெப்பத்தில் பூமிப்பந்து சூடாகிக் கொண்டே போகிறது. வெப்பமயமாதலின் காரணத்தால் வர இருக்கும் அழிவிலிருந்து பூமியைக் காக்க மனித இனத்தால் தான் முடியும் , ஏனென்றால் இதற்கெல்லாம் காரணமே மனித இனமும் இந்த இனத்தின் அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியும் தானே. எனவே சூழலியல் விழிப்புணர்வு என்பது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் வேண்டும். அந்த விழிப்புணர்வை எழுத்தின் வழியாக, பேச்சின் வழியாக, காட்சிகளின் வழியாக என பரப்புவதற்கு இலக்கியவாதிகள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் தாமாக முன்வந்து செயலாற்ற வேண்டும். இது ஒரு நாளில் ஆகக் கூடிய செயலல்ல அல்லது சில பல நாட்களில் முடிந்துவிடக்கூடிய கடமையல்ல. இது காலத்துக்கும் தொடர வேண்டும். மனித இனம் வாழும் மட்டும் விழிப்புணர்வுடன் இயற்கையை, சுற்றுப்புறத்தைப் பயன்படுத்த மனிதனுக்குப் பழக வேண்டும். அப்போது தான் மனித இனம் இன்னும் கொஞ்ச காலம் பூமியில் வாழ முடியும்.

ஆனால், அவரது கருத்தில் ஒரு முரண்பாடும் இருக்கிறது. சைபீரியாவிலிருந்து வலசை வரும் பறவைகளின் பெயர்களை ஒரு கவிஞன் அவசியம் தெரிந்து தான் ஆக வேண்டுமா . ஆண்டு முழுவதும் நமது தேசத்துக்கு பல்வேறு தேசங்களிலிருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்துக்காகவும் சூழ்நிலைக்காகவும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. இங்கிருந்தும் வெளிநாடுகளுக்குப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் பூமியில் தோன்றிய காலத்திற்கு முன்பிருந்தே கூட இது நடைமுறையில் இருந்திருக்கலாம். அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்கிற வரைக்கும் போதும். அவற்றின் பெயரையெல்லாம் கவிஞர்கள் தெரிந்து கொண்டு தான் கவிதை எழுத வேண்டும் என்பதில் ஒப்பில்லை. அப்படிப்பார்த்தால், பறவைகள் மட்டுமா தேசம் விட்டு தேசம் பறக்கின்றன. தங்கள் வாழ்வாதாரத்துக்காக அகதிகளாக , கைவிடப்பட்டவர்களாக எத்தனை எத்தனை மனிதக் கூட்டம் தேசம் விட்டு தேசம், மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் தினம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் துன்பம் அறிவோமா .? அவர்கள் ஒவ்வொருவரின் பெயரும் நமக்குத் தெரியுமா.? பறவைகளின் பெயரை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து சொல்ல மெத்தப்படித்த அறிஞர்களும், சூழலியல் ஆர்வலர்களும் இருக்கிறார்கள் அல்லவா. அவர்கள் கடமையை அவர்கள் செய்தால் போதும். அவர்களிடம் போய் நீங்கள் ஏன் கவிதைகள் , கட்டுரைகள் எழுதுவதில்லை மொழிக்கு எதுவும் செய்வதில்லை என்று கேட்க முடியுமா.?

விவாதங்களுக்கு அப்பாற்பட்டு,
சூழலியல் பிரச்சினைகளுக்கு வருவோம். உண்மையில் காடழிப்பு, வாகனப்பெருக்கம், காற்று மாசுபடல், நீர்வளம் குறைந்து கொண்டே போதல், புவி வெப்பமயமாதல், உயிரினங்களின் அழிவு, என சுற்றுச் சூழல் பிரச்சினைகள் பெருகிவிட்டன. ஒவ்வொரு சிக்கலுக்கும் துறை சார்ந்த விஸ்தாரமான ஆய்வுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீர்வுகளும் அவசியமாகின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் களைய அரசும், அறிவியல் நிறுவனங்களும் தொடர்ந்து பல முன்னெடுப்புகளைச் செய்து கொண்டிருக்க, எந்த மாற்றங்களையும் போல இந்த மாற்றமும் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கியம். ஒவ்வொருவரும் தத்தமது பங்குக்கு சூழல் மாசுபாட்டுக் காரணிகளை அறிந்து நடந்தால் போதும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
முதல் பிரச்சினையாக நெகிழிப்பைகள், நெகிழிப் பொருட்களின் பயன்பாடுகளைக் குறைத்து மாற்றுப் பொருட்களைப் புகுத்துதல் அவசியம். மக்கவே மக்காத நெகிழிப் பைகளால் பூமிப்பந்து மூச்சுவிடவே சிரமப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
நீர்வளத்தைப் பெருக்குதல் அடுத்தது. தற்போதுள்ள நிலைப்படி , நிலத்தடி நீர் இன்னும் வெகு சில நூற்றாண்டுகளுக்குத்தான் தாங்கும். பிறகு குடிக்கக் கூட நீரில்லாத சூழல் உண்டாகும். இதற்கான மாற்று யோசனைகளாக கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உட்பட நிறைய இருப்பினும் நாம் , மழை நீரைச் சேமித்தல், விரயமாகும் உபரி நீரைச் சேமித்தல் போன்ற முன்னெடுப்புகளால் வரும் காலத்துக்குக் கொஞ்சம் தண்ணீரை மிச்சப்படுத்தலாம்.

நம்மிடம் இருக்கும் பெரிய குறை, குப்பை மேலாண்மை ( Waste Management ) இல்லாததும் தான். அந்த அறிவும், உணர்வும் இல்லாததால் தான் சாக்கடைக் கழிவுகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் ஆறு,குளங்களில் கலந்து இருக்கும் கொஞ்சம் நீரையும் பாழ்படுத்தி விடுகிறோம். மக்கும் குப்பை, மக்காத குப்பை என்றெல்லாம் இன்னும் தரம் பிரித்து அவற்றைப் பக்குவமாகக் கையாளத் தெரியாமல் பூமியை குப்பை மேடாக்கிக் கொண்டிருக்கிறோம். தற்போதுதான் குப்பை மேலாண்மை பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும், சாயக்கழிவுகளை ஆற்றில் கலப்பது, கோழி இறைச்சிக் கழிவுகளை பக்கத்து மாநிலத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போவது, வெளிநாட்டுக்காரர்களின் மின்னணு ( Electronic Waste ) மற்றும் மருத்துவக் கழிவுகளை கப்பல்களில் கன்டெய்னர் கன்டெய்னராகக் கொண்டு வந்து கொட்டுவது போன்ற குற்றச் செயல்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலொழிய தடுக்கவே முடியாது.

நமது குளங்கிலெல்லாம் பரவிக்கிடக்கும் ஆகாயத் தாமரைகள், சீமைக் கருவேல மரங்கள் எல்லாம் நமது சொத்துகளா ..? வெளிநாட்டிலிருந்து இங்கு திட்டமிட்டோ அல்லது அஜாக்கிரதையாகவோ கொண்டு வந்து சேர்க்கப்பட்ட நமக்கான தீரா நோய்கள் தானே. இவற்றைக் களைய நாம் என்ன முன்னெடுப்புகளை எடுக்கிறோம். சீமைக் கருவேல மரம் ஒழிப்பு இயக்கம், சிறுதுளி, ஓசை என் சூழலியல் அமைப்புகள் கோவையிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றன.
மரங்களின் அத்தியாவசியமும் மரக்கன்றுகளை நடுவடும் இப்போது நம் மக்களிடையே விழிப்புணர்வாக வந்திருப்பதும் ஆறுதலாக உள்ள விஷயங்கள்.

சூழலியல் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பலர் போராடி வருகிறார்கள். அவையெல்லாம் மொத்தமாக பெரிய அளவில் நடக்கும் சீர்கேடுகளுக்காக. தனிமனித பாதிப்புகள் சிறு சிறு துளிகளாக இருக்கின்றன. ஆனால் அவை ஒன்றாக சேர்ந்து தான் மிகப்பெரிய மாசு உருவாகிறது. எனவே, ஒவ்வொரு தனி மனிதனும் கைகளைக் கோர்த்து இணைந்து செயல்பட்டால் மட்டுமே சூழல் மாசுபாட்டைக் குறைத்து இன்னும் கொஞ்ச நாட்கள் நம் சந்ததியினர் இந்தப் பூமியில் நிம்மதியாக வாழ முடியும்.

எதிர்கால அறிவியலால,செவ்வாய் கிரகத்தில் இடம்பார்த்துக் குடியேறலாம் தான் ஆனால் இத்தனை அழகான செழிப்பான நம் பூமியைப்போல இன்னொரு கிரகம் கிடைக்குமா. யோசிக்கலாம்...


_____________



இப்படைப்பு எனது சொந்தப்படைப்பு.“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” இது , இதற்கு முன் வெளியான படைப்பல்ல என்றும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

போட்டி வகைமை : சுற்றுச்சூழல் கட்டுரை ; எண் : 2

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

எனக்குப் பிடித்த என் கவிதைகள் சில...

மகாபாரதம் இதிகாசமானது
பகவத்கீதை வேதமானது
கண்ணன்அர்ச்சுனன் அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

______________________

பொம்மைகளின் மொழி

குழந்தைகளின் மொழி
அம்மாக்களுக்கு மட்டுமே
புரிவது போல

பொம்மைகளின் மொழி
குழந்தைகளுக்கு மட்டுமே
புரிகிறது

______________________

சின்னதாகத்தான் ஆரம்பித்தேன்
எனினும்
துளைகள் கிடைத்த
நிலங்களனைத்திலும்
தன் வேர் பரப்பி
நீண்ட நெடிய கிளைகளுடன்
ஓங்கி வளர்ந்துவிட்டன
என் பொய்கள்

______________________

வரம் தருகிறேனென்று
வருகின்ற
கடவுள்களால் தான்
கலைக்கப்படுகின்றன
என் தவங்கள்

___________________

ஏதாவதொன்றைத்
தேடும்போது கிடைத்துவிடுகிறது
நான் 
எப்போதோ தேடிய ஒன்று


- எனது முதல் தொகுப்பான " பொம்மைகளின் மொழி" நூலிலிருந்து

திங்கள், 21 செப்டம்பர், 2015

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஒன்பதாவது இலக்கிய சந்திப்பு

பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் இருபத்தி ஒன்பதாவது இலக்கிய சந்திப்பு 20.09.2015 அன்று பாலக்காடு சாலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கவிஞர் அய்யப்பமாதவன் அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பான புத்தனின் விரல் பற்றிய நகரம் தொகுப்பை அறிமுகம் செய்வது என்பது இரண்டு மாதங்களுக்கு முன்னரே முடிவானது. அன்றிலிருந்து அடிக்கடி அய்யப்பமாதவனிடம் பேசி வந்தேன். பெரிய கவிஞர், மிகுந்த அனுபவசாலியாக இருந்த போதிலும் மிகவும் ஆர்வத்துடன் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வர மிகவும் விருப்பத்துடன் இருப்பதாகவும் அவ்வப்போது தங்கும் இடம், போக்குவரத்து பற்றிய தகவல்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன் உங்களையெல்லாம் சந்திக்க வருவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அடிக்கடி சொல்வார். நாங்களும் ஆர்வமுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தோம்.

இலக்கிய வட்ட நிகழ்வுக்கு இரண்டு நாட்கள் முன்னர் அய்யப்ப மாதவனின் தாயார் காலமாகி விட்டார் என்ற செய்தியைச் சொன்னார். மிகவும் வருத்தமாக இருந்தது. அதற்கும் ஓரிரு நாட்கள் முன்னர் தான் அவர் அம்மாவைச் சென்று சந்தித்து விட்டு சென்னை திரும்பியிருப்பதாகச் சொல்லியிருந்தார். சென்னை வந்த வேகத்தில் தகவல் வந்திருக்கிறது. அழைத்து தகவல் சொன்னார். தன்னால் நிகழ்ச்சிக்கு வர இயலாது ஆனால் திட்டமிட்டபடி நிகழ்வு நடக்கட்டும் என்றார். கவிஞரின் தாயார் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

திட்டமிட்டபடி நிகழ்வை நடத்துவது என முடிவானது. மனுஷி சனிக்கிழமை இரவு கிளம்பி ஞாயிறு அதிகாலை பொள்ளாச்சி வந்து சேர்வதாகத் தகவல் அனுப்பியிருந்தார். கருணாப்ரசாத் அவர்கள் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பொள்ளாச்சி வந்து சேர்வதாகத் தகவல் சொன்னார். சோலை மாயவன் அவரை அழைத்துச் சென்று தங்கவைப்பதாக ஏற்பாடு.

இரவு பத்து மணி வரைக்கும் இருவருடனும் பேசி திட்டங்களைச் சொல்லிவிட்டு, மனுஷிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன், தங்கள் செல்பேசி காலையில் சார்ஜ் இல்லாமல் போய்விடும் என்னை அழைக்க இயலாமல் போய்விடும் எனவே ஒரு தாளில் என் எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பினேன். அதே செய்தியை கருணாப்ரசாத் அவர்களுக்கும் அனுப்பி விட்டதாக நினைத்து அனுப்ப மறந்துவிட்டேன்.
மனுஷியின் செல்பேசி சார்ஜ் தீரவில்லை. கருணாப்ரசாத் அவர்களின் செல்பேசி தான் காலை வாரிவிட்டது. அவர் வரும் நேரத்தில் சோலைமாயவன் பேருந்து நிலையம் சென்றும் விட்டார். அழைத்துப் பார்த்தால் அவரது எண் அணைத்துவைக்கப்பட்டுள்ளதாக வருகிறது. இரவு 11.30 வரை அவரும் பேருந்து நிலையக் கடைகள் எங்கும் தேடிச் சலிக்க, நானும் அழைத்து அழைத்துப் பார்க்க, கருணாப்ரசாத் பேருந்து நிலைம் பக்கத்திலேயே ஒரு அறை எடுத்து தங்கி, சார்ஜ் போட்டுக் கொண்டு பின்பு அழைத்தார். நானே அறை எடுத்துவிட்டேன் காலையில் சந்திக்கலாம் என்றார். மணி இரவு 12 ஆகிவிட்டது. பின்னர் சோலை கிளம்பிச் சென்றிருக்கிறார். காலையில் 5.45க்கெல்லாம் மனுஷி வந்து சேர, அவரையும் சோலைமாயவனே அழைத்து அறையில் தங்கவைத்துவிட்டு வந்தார். சோலைமாயவன் நகரத்திலேயே வீடு பார்த்து இந்த மாதம் தான் குடிவந்திருந்தது நல்லதாகிப்போனது.

காலை 8.30 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடக்கும் பள்ளிக்கூடத்துக்கு வந்து சேர்ந்தேன். எனக்கு முன்னரே அம்சப்ரியா, சோலை மாயவன் வந்துவிட்டார்கள்.
திட்டமிட்டமடி நிகழ்ச்சி ஆரம்பம். அய்யப்பமாதவனின் தாயாரின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தினோம் நிகழ்வின் துவக்கத்தில். அடுத்ததாக படித்ததில் பிடித்தது நிக்ழச்சியில் வாசகர்கள் இந்த மாதம் தாங்கள் வாசித்ததில் பிடித்த கவிதை,கதைகளை வாசித்தனர்.பின்னர் எனது வரவேற்புரை. அடுத்ததாக, அய்யப்பமாதவன் அவர்களின் புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிதைத் தொகுப்பை கவிஞர்,ஓவியர் மோனிகா அவர்கள் அறிமுகப்படுத்திப் பேசினார். அய்யப்பமாதவனின் கவிதைகள் எளிமையானவை எனத் துவங்கி அவரின் நிறையக் கவிதைகளை வாசித்துக்காட்டி அறிமுகம் செய்துவைத்தார்.

அடுத்ததாக ந.முத்துசாமி நாடகங்களின் தொகுப்பை பொன்.சந்திரன் அவர்கள் அறிமுகப்படுத்திப்பேசினார். நீளமான உரை. கூத்துக் கலையைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்தார்.

அடுத்து சுரேஷ்வரனும் ந.முத்துசாமி நாடகங்களின் தொகுப்பை தனது பாணியில் அறிமுகப்படுத்திப்பேசினார். அவரது உரையை அப்படியே இங்கு வாசிக்கலாம் .
கருணாப்ரசாத் அவரது ஏற்புரையின் போது ஒலிவாங்கியைத் தவிர்த்துவிட்டார். ஒரு நாடகக் கலைஞனான எனக்கு ஒலிவாங்கி அனாவசியம் என்று தான் பேசவே ஆரம்பித்தார். .முத்துசாமி அவர்களின் நினைவலைகள், அவரது எழுத்து, நாடகங்களில் நவீனத்தைப் புகுத்தியது போன்றவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

மாணவி கிருத்திகா எட்வின் படைப்புகள் பற்றிப் பேசினார். அவரது தொகுப்பிலுள்ள ஒரு கதையைப் படித்துவிட்டு அடுத்த கதைக்கு நகரமுடியவில்லை. மிகவும் பாதித்துவிட்டது என்று குறிப்பிட்டார்.
மாணவி வே.கோகிலா தாமஸ் க்ரேயின் ஆங்கிலக் கவிதையை வாசித்து, அதற்கு விளக்கம் சொல்லி அந்தக் கவிதயை தான் மொழியாக்கம் செய்த தமிழ்க் கவிதையையும் வாசித்தார்.

சோலைமாயவன் கவிஞர் மனுஷியின் முத்தங்களின் கடவுள் கவிதைத் தொகுப்பை அறிமுகம் செய்தார். வழக்கத்தைவிடவும் உற்சாகமாகவும் சிறப்பாகவும் இருந்தது சோலை மாயவனின் பேச்சு. பத்து நாட்களாகவே அவர் மனுஷியின் பாம்புப் பிடாரி கவிதையை அனைவரிடமும் வாசித்துக் காட்டி அவர்கள் பாம்புக்கு சொல்லும் உவமையைக் கேட்டுக் கொண்டிருந்தார். மனுஷி தன் ஏற்புரையில் இந்தக் கவிதைகள் என் இருத்தலுக்கான சாட்சி என்றார். மேலும் இந்தக் கவிதைகளில் இருக்கும் குரல் எனது குரல்மட்டுமல்ல என் சமூகப் பெண்களின் குரல். அவர்களின் கண்ணீர், வலி அனைத்தும் தான் என் வரிகள் என்றார்.

பின்னர் இயற்கை இயலாளர் முகமது அலி அவர்கள் சூழலியல் பிரச்சினைகளை சிறப்புரையில் ஆதங்கமாக வெளிப்படுத்தினார். இலக்கியங்களில் இயற்கையையும் உயிர்களையும் கொண்டாட வேண்டும். இலக்கியவாதிகளுக்கு சூழலியல் அக்கறை வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையின் படைப்புகளை அறிவியல் ரீதியாக அறிந்து கொள்ள வேண்டும். இலக்கியங்களை விடவும் அறிவியல் முக்கியமானது என்று சொன்னார். ராஜநாகம் மாணிக்கக் கல்லைக் கக்கும் போன்ற அபத்தங்களை இனியும் எழுதக் கூடாது, மாணிக்கம் நிலத்தில் கிடைக்கும் ஒரு விதக் கல். ராஜநாகம் அதைக் கக்காது என்று அறிவியல் நிரூபித்துள்ளது. இது போன்ற அறிவியல் உண்மைகளை, வன உயிரிகளின் வாழ்வை இலக்கியவாதிகள் உட்பட நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்று பேசினார்.

வாசகர்கள் கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கம் நடந்தது 15 கவிஞர்கள் கவிதைகளை வாசித்தனர்.
இப்போதே மணி 2.30 ஆகிவிட்டிருந்தது நிகழ்வில் நாங்கள் ஆவலாக எதிர்பார்த்திருந்த நட்சத்திரப் பேச்சாளர் இளஞ்சேரல் அவர்கள்தான் கடைசியாகப் பேச வேண்டும். காலத்தைக் கணக்கில் கொண்டு அவரது நூல் அறிமுகத்தை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அந்த மிகக் குறுகிய நேரத்தையும் தனது வழக்கமான பேச்சில் சிறப்பாகக் கையாண்டுவிட்டார். நிகழ்வில் வாசித்த கவிதைகளைச் சுட்டிக்காட்டியும், அய்யப்பமாதவனது கவிதைகளை அறிமுகம் செய்தும் சிறப்பாகப் பேசிவிட்டார். எங்களுக்குத்தான் சங்கடமாகிவிட்டது. அதிரடி ஆட்டநாயகனை கடைசி ஓவரில் இறக்கிவிட்டுவிட்டோமே என்று. இருந்தும் இளஞ்சேரல் அவர்கள் அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை பூபாலன் இலக்கியக் கூட்டங்களில் இப்படியும் நடக்கும் என்று ஆதரவாகப் பேசினார்.

கவிஞர் அம்சப்ரியா அவர்களுடைய நன்றியுரையுடன் விழா இனிது முடிந்தது
எப்போதும் அதிகபட்சம் இரண்டு மணிக்கு கூட்டம் முடிந்துவிடும் ஆனால் இந்த முறை கூட்டம் முடிய மூன்றாகிவிட்டது. ஒரு தொகுப்புக்கு இரண்டு பேர் பேசுவது இதுவே முதன் முறை. இருவரும் விஸ்தாரமாகப் பேசியதால் இந்தக் கால தாமதம். இனி அடுத்த மாதத்திலிருந்து காலவரையறை ஒவ்வொரு அமர்வுக்கும் கடைபிடிக்கலாம் என்று முடிவானது.
சாப்பிடும் போது மணி நான்கைத் தாண்டிவிட்டது, அதன் பின் அனைவரையும் வழியனுப்பிவிட்டு, கிணத்துக்கடவில் இலக்கிய வட்டத் தோழர் பானுமதி அவர்களின் தாயார் இறந்து ஒரு வாரமாகியிருந்தது. அங்கு சென்று அவருக்கு ஆறுதலாகப் பேசிவிட்டு வந்தோம் நான், அம்சப்ரியா,சோலைமாயவன் மற்றும் இன்பரசு ஆகியோர். வீட்டுக்குள் நுழையும் போது மணி இரவு ஒன்பது. காலையில் 7மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பிய ஒரு ஜந்து இப்போது தான் வந்திருக்கிறது என்பது போலெல்லாம் பார்க்காமல் சாப்பிடுறீஙகளா என்று கேட்டார் மனைவி " ம் " சொல்வதற்குள் தொலைபேசியில் சுரேஸ்வரன் மூன்றாவது முறையாக நினைவு படுத்தினார், "தோழர்.! நிகழ்வின் புகைப்படங்களை அனுப்புங்க வாட்ஸப்பில், நான் முகநூலில் பதிகிறேன்" என்று. கேமிராவிலிருந்து காபி செய்து, புகைப்படங்களை எடிட் செய்து, அதை வாட்ஸப்பில் அனுப்பிவிட்டுப் பார்க்கிறேன் மணி பத்தைத் தாண்டிவிட்டது.
சாப்பிட்டுவிட்டு மனுஷி,மோனிகா, கருணாப்ரசாத் ஆகியோரிடம் பேசி , கிளம்பிவிட்டார்கள் என்பதை உறுதி செய்துவிட்டுத் தூங்கப் போகிறேன்.
நாளை நமக்காகவே காத்துக்கொண்டு இருக்கிறது திங்கட்கிழமை ...
நிகழ்வில் செய்தி மடல் வெளியிடப்பட்டது. உங்கள் பார்வைக்கு