திங்கள், 18 மே, 2015

பொள்ளாச்சி இலக்கியவட்டம் குழந்தைகள் கலைக்கொண்டாட்டம்

ஒரு வருடமாகக் காத்திருந்து , ஒரு மாதமாகத் திட்டமிட்டு, ஒரு வாரமாக பேய் மாதிரி உழைத்து ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தால் எப்படி இருக்கும்.? அப்படி இருந்தது கடந்த ஞாயிறு நடந்த குழந்தைகள் கலைக் கொண்டாட்டம்.






200 குழந்தைகள் 100 பெற்றோர்கள் , எழுத்தாளர்கள், கதை சொல்லிகள், என அரங்கம் நிறைந்து உட்கார இடமின்றி நின்றுகொண்டே ரசித்த நிகழ்ச்சி ஒரு பெரிய மன நிறைவையும், சிறு சோர்வையும், அடுத்த வருடம் இதைவிடவும் சிறப்பாக நடத்த வேண்டுமே என்ற பயத்தையும் ஒருங்கே தந்தது இந்த நாள்.

ஒரு மாதமாகவே திட்டமிடுகிறோம் என்றாலும், கடைசி ஒரு வாரம் அலைச்சல் மிக அதிகம். பொள்ளாச்சியில் சரியான மழை வேறு தினமும் மாலை நேரங்களில் மழை ஊற்றும். மழையிலேயே அலைவோம். இரவு தினமும் வீடு வர 10 அல்லது 11 ஆகிவிடும். இந்த முறை மட்டும் தான் வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. தண்ணி தெளிச்சுட்டுங்காளோ.

200 பேர் எனத் திட்டமிட்டதும், பெரும் செலவு பிடிப்பதும் பெரும் உழைப்பு தேவைப்பட்டதும் உணவுக்குத்தான். இருநூறு பேருக்கும் சமைக்க ஆள் வேண்டும் என்பதால் ஊரிலிருந்த சமையல்கார லட்சுமி அக்காவை சனிக்கிழமையே வரச் சொல்லியாகிவிட்டது. சனிக்கிழமை காலையிலேயே காய்கறிகள், மளிகைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், அனைத்தையும் வாங்கி வந்து தந்து விட்டோம். சனிக்கிழமை மாலையிலிருந்தே சமையல் வேலைகளைத் தொடங்கிவிட்டார்கள். அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மனைவி, மனைவியின் அண்ணி, ஊரிலிருந்து வந்திருந்த அண்ணி, அக்கா என பத்து பேர் பர பரவென வேலை செய்ய நாங்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் இருந்தோம். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3 மணிக்கே பத்து பேரும் எழுந்து அவரவர் வேலைகளை ஆரம்பித்து பத்து மணிக்கெல்லாம் சமையலை முடித்துவிட்டிருந்தார்கள். இப்படி ஒரு குடும்பம் அமைந்து விட்டால், எத்தனை பெரிய வேலையையும் இழுத்துப் போட்டுக்கொள்ளலாம்

குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்கள் , பென்சில், ரப்பர், ஷார்ப்னர், ஓவியம் வரைய அட்டை, இனிப்பு, காரம், தேநீர் , உணவு, தண்ணீர், பதாகைகள் , குழந்தைகலுக்குச் சான்றிதழ்கள் என அனைத்து ஏற்பாடுகளும் தயார். இதோ ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தினும் மாறாக ஐந்து மணிக்கே விடிந்துவிட்டது எனக்கு. ஒரு பச்சைத் தேநீரைச் சுவைத்து விட்டு பக்கத்தில் தோப்புக்குப் போய் 100 தென்னங்கீற்றுகளைச் சேகரித்து வாங்கி வருகிறேன். குழந்தைகள் நாய் வால் உருவி எனும் விளையாட்டை விளையாட இனியன் கேட்டிருந்தார். வந்து குளித்து முடித்து, நிகழ்ச்சி நடக்கும் கல்லூரி அரங்குக்கு வரும் போது மணி 8 ஆகிவிட்டிருக்கிறது.

இன்னும் ஒரு மணி நேரத்தில் இந்த இடம் திருவிழாக் கூட்டமாகிவிடும். எங்களுக்கும் முன்பாகவே அம்சப்ரியா அவர்களும், புன்னகை ஜெயக்குமார், சோலை மாயவன் வந்திருந்தார்கள்.  பதாகைகளை மாட்டி அரங்கத்தைத் தயார் செய்கிறோம். குழந்தைகளும் பெற்றோர்களும் வரத் துவங்கியிருந்தார்கள்

பொள்ளாச்சி இலக்கியவட்டத் தோழிகள் கீதாப்ரகாஷ், கோகிலா, கிருத்திகா அனைவரும் வரும் குழந்தைகளைப் பெயர் பதிவு செய்து அரங்கத்தினுள் அனுப்பிக் கொண்டிருந்தனர். ராமகிருஷ்ணன், காளிமுத்து, செந்தில்குமார் நண்பர்கள் அனைவரும் அவர்களை நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
பதிவு செய்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இன்ப அவஸ்தையில் மனம் குதூகலமானது. வீட்டுக்கு அழைத்து இன்னும் அஞ்சு கிலோ அரிசி அதிகமாகப் போடலாம் என்று சொல்லிவிட்டு, நிகழ்ச்சிக்கான திட்டமிடலில் இறங்கினோம். சுரேஷ்வரன், வெங்கட், குமார்ஷா, இனியன், தயாளன் அனைவரும் தயாரானார்கள்.



அரங்கத்தில் நானும் அம்சப்ரியா அவர்களும் குழந்தைகளை வரவேற்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் அறிமுகம், இந்த நிகழ்ச்சியின் நோக்கம், இந்த நிகழ்ச்சியில் எங்கு செல்ல வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்பதான சிறு உரையை வழங்கினோம் . மகள் தனிக்‌ஷா பாரதி வரவேற்புரை வழங்கினார். இதற்கு அடுத்து குழந்தைகள் வந்த வண்ணமிருந்தபோது மேடையைக் குழந்தைகளிடமே ஒப்படைத்தோம்.

ஒரு குட்டி பாடல் பாடுகிறாள், ஒரு குட்டி கதை சொல்கிறான் , ஒரு குட்டி திருக்குறளை திருவள்ளுவரை விடவும் அழகாகச் சொல்லிகிறாள் அடடா அமர்க்களம்.

200 குழந்தைகளையும் நான்கு குழுவாக முதலில் பிரித்தோம் கிளி, மைனா, மயில், குயில் என நான்கு குழு.

முதல் குழுவுக்கு கதையும் பாடலும், இரண்டாவது குழுவுக்கு கதையும் ஓவியமும். மூன்றாவது குழுவுக்கு கிராமத்து விளையாட்டுகள், நான்காவது குழுவையும் விளையாட கூட்டிப் போயாகிவிட்டது. குமார் ஷா, வெங்கட் கதை சொல்ல, தயாளன் ஓவியம் வரையப் பழக்கினார். இனியனும், சுரேஷ்வரனும், மழைக்காதலனும் குழந்தைகளை விளையாட நெறிப்படித்தினார்கள். . ஒரு குழு தோழர் மணிமுத்துவிடம் ஒரிகாமி கற்றுக் கொண்டு பூக்கள் செய்து பழகிக் கொண்டிருந்தார்கள். முதல் ஒன்றரை மணி நேரம் நான்கு இடங்களில் மர நிழலில் குதூகலமானார்கள்  குழந்தைகள்.

இடையில் குழந்தைகளை கவனிப்பது , உணவு தின்பண்டங்கள், தண்ணீரை ஒருங்கிணைப்பது, என நான்கு இடங்களுக்கும் மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டிருந்த நாங்கள் தான் எதையும் முழுமையாக ரசிக்க முடியவிலலை.

குழந்தைகளுக்கு லட்டு மற்றும் மிக்சரை மாமாவும், கார்த்தியும் வாங்கி வந்தார்கள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தந்துவிட்டு, தேநீரும் வர, பருகிவிட்டு அரங்கத்தினுள் வந்தார்கள்.
அரங்கத்தில் லெவி சமூக அமைப்பினரின் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பொம்மலாட்டத்தை நிகழ்த்த சாமுவேல் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்

முதலில் ஒரு சிறு நகைச்சுவை நாடகம், சினிமா பார்த்து, சினிமா மோகத்தில் கெட்டுப் போகும் மாணவர்கள் பற்றிய ப்ளே. தமிழ் சினிமா பாணியில் நாடகம் முழுதும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிட்டு கடைசியில் கருத்து சொன்னார்கள். குழந்தைகள் ரசித்துச் சிரித்தார்கள். அடுத்ததுதான் பொம்மலாட்டம் அட்டகாசம்.

பொம்மைகள் பேசப் பேச , குழந்தைகள் கூடக் கூடப் பேசி ஆரவாரம் செய்தனர். இந்த முறைதான் பொம்மலாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம் செம வரவேற்பும் உற்சாகமும் குழந்தைகளிடம். . ஆர்வத்தில் சிறுவர்கள் பொம்மலாட்ட மேடைக்கு அருகில் ஓட நான் அவர்களை ஓடிப் போய் வாரித்தூக்கி மேடைக்குக் கீழே இறக்கிவிட்டது உற்சாகமான அனுபவம்.

விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது அதைவிடவும் ஆச்சரியம் பெற்றோருக்கான விளையாட்டுகளில் உற்சாகமாக பெற்றோர்கள் கலந்து கொண்டதுதான். அதிலும் சிலர் சேலை கட்டிக் கொண்டு உங்களால ஓட முடியாது வேண்டாம் என்றாலும் கேட்காமல் ஓடி, விழுந்து , உருண்டு புரண்டு விளையாடி குழந்தையாகவே மாறிவிட்டார்கள். மனதுக்கு அத்தனை நிறைவு இவற்றையெல்லாம் பார்க்கும்போது. ஒரே ஒரு சகோதரிதான் பாவம் ஆர்வத்தில் வேகமாக ஓடி, சேலை தடுக்கி கீழே விழ கையில் லேசான அடி. சுளுக்குதான் சரியாகிவிடும்.

இப்போது உணவு இடைவேளை உணவு தயாரிக்கும் போதே சொல்லி இருந்தேன் , 250 லிருந்து 300 பேர் சாப்படறமாதிரி செய்யுங்க என்று. வந்தவர்கள் , நண்பர்கள், கல்லூரி துப்புறவுப் பணியாளர்கள், செக்யூரிடி நண்பர்கள் என மொத்தம் 375 பேர் சாப்பிட வேண்டும். பதட்டம் கூடிவிட்டது அனைவரும் சாப்பிடட்டும் சாப்பிடட்டும் என பார்த்துக் கொண்டே இருந்தேன். சோலைமாயவன் உணவுத்தட்டு போதாமல் இரண்டுமுறை மழையிலேயே வண்டியில் சென்று தட்டு, டம்ளர்கள் வாங்கி வந்தார். அனைவரும் திருப்தியாக சாப்பிட்டபோது வந்ததே ஒரு நிம்மதி அப்பாடா. கடைசி ஆளாக நாங்கள் சாப்பிடும்போது வயிறும் மனதும் நிறைந்திருந்தது. எல்லோருக்கும் போகவும் கொஞ்சமே கொஞ்சம் சாப்பாடு மிச்சமானது.

உணவுக்குப் பின் மீண்டும் கதை, விளையாட்டு, அவைநாயகன் அண்ணனின் பாடல் என அமளி துமளிதான். மீண்டும் அரங்கம் வர 4 மணி ஆகிவிட்டது. அடுத்து ராம்ராஜ் மற்றும் குழுவினரின் நாடகம். சரியான காய்ச்சலிலும் குழந்தையின் உற்சாகத்தோடு ராம்ராஜ் தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்க குழந்தைகள் ஆரவாரித்தனர்.


வந்திருந்த 200 குழந்தைகளுக்கும் சான்றிதழ் வழங்க , அனைத்துக் குழந்தைகளுக்கும் நண்பர் மழைக்காதலன் ஒரு கதைப்புத்தகம் தர முடிவு செய்து வாங்கி வந்திருந்தார். ஒவ்வொரு குழந்தையையும் மேடைக்கழைத்து அவர்களுக்கு சான்றிதழும் புத்தகப் பரிசும் தர அரங்கம் கொஞ்சம் கொஞ்சமாக காலியானது.. அத்தனை குழந்தைகளின் முகத்திலும் அப்படி ஒரு உற்சாகம். ஆழியார் மலைவாழ் இல்லக் குழந்தைகள் சுமார் 40 பேரையும் அழைத்திருந்தோம் அவர்களது ஆசிரியர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்களின் உற்சாக முகங்கள் எங்களுக்கு இன்னும் கூடுதல் நிம்மதியைத் தந்தது.

எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், இளஞ்சேரல், அவைநாயகன், யாழி,அனாமிகா, தியாகு, மெளனம் ரமேசு , ஷேக் அப்துல்லா, ப்ரியா கங்காதரன் என அனைவரும் வந்திருந்து முழுநாளும் உடன் பயணித்தது அழகாக இருந்தது.

நம் இலக்கியவாதி நண்பர்களெல்லாம் ஸ்லீப்பர் செல்கள் போல அங்கங்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு இலக்கிய நிகழ்வு என்றதும் அன்றைக்கு ஒன்று கூடி ஆபரேஷனுக்குத் தயாராகி விடுகிறார்கள் . அவர்களுக்கெல்லாம் தீரா அன்பு.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் புலமாக நிறையப் பேர் பொருளாக, உழைப்பாக, அன்பாக என பல்வேறு நண்பர்கள் உதவியிருக்கிறார்கள் அவர்கள் அத்துனை பேருக்கும் எப்படி நன்றி சொல்வது. அவர்களால் தான் இந்த நிகழ்ச்சி இத்தனை சாத்தியப்பட்டது. நாங்கள் ஒரு கருவி தான். உங்கள் அத்துனை பேருக்கும் எங்கள் அன்பு.

எல்லா வேலையும் முடிந்து வீடு திரும்புகிறேன் இன்றும் இரவு மணி எட்டுக்கும் மேலாகிவிட்டது. அசதி தான். இருப்பினும் திங்கட்கிழமைக் காலை ஆறுமணிக்கு அடிக்கும் அலாரத்துக்குத் தெரியவா போகிறது என் அசதி. காலையில் நான் வேறொரு நானாகி ஓடவேண்டும் வேலைக்கு ...