புதன், 9 ஏப்ரல், 2014

மகள்கள் வகுப்பெடுக்கிறார்கள் ...

ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்தாகவும் இருக்கலாம். இருப்பினும், எனது இரண்டு அனுபவங்களின் வாயிலாக அதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சம்பவம் # 1 :

சனிக்கிழமை மாலை மகளுக்கு சிறப்பு வகுப்பு. அழைத்துக் கொண்டு போய்விட்டு அவளுக்கு சாப்பிட வாங்கித்தர ATM சென்றேன். பணம் எடுத்துவிட்டு இரண்டு வழிச் சாலையின் அந்தப்புறம் செல்ல கொஞ்சதூரம் சென்று U வளைவு எடுத்துத் திரும்ப வேண்டும். அதற்குச் சோம்பேறித்தனப்பட்டு ஒரு வழிச் சாலையிலேயே எதிர்த்திசையில் மெதுவாக ஓட்டி வந்தேன். கொஞ்ச தூரம் தான். காந்தி சிலை வந்ததும் நேர் வழிக்குத் திரும்பிவிடலாம். அதற்கு விட்டாளா அவள்.? அப்பா, அப்பா.. ஏம்பா இப்படிப் போறீங்க.? சுத்திப் போனா லேட் ஆயிடும்டா அதான் என்றேன். போட்டாள் பொடணியிலேயே. எங்க மிஸ் சொல்லி இருக்காங்க சாலை விதிகளை நாம சரியா கடை பிடிக்கனும்னு. நாமளே கடை பிடிக்கலனா வேற யாருப்பா சரியா போவாங்க.? அதுவும் சரிதான். வண்டியைத்திருப்பிவிட்டேன். கொஞ்ச தூரம் தான். எப்போதும் தலைக்கவசம் அணிந்தே வண்டி ஓட்டுவேன். ரொம்ப வேர்த்து தலை நன்றாகவே ஈரமாகிவிட்டதால் அந்த மண்டையைக் கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு ஓட்டினேன். அதற்கும் பிடித்துவிட்டாள். அப்பா எங்க மிஸ் சொல்லி இருக்காங்க.... "ஹெல்மெட் ரொம்ப இம்பார்டன்ட்." " உப்புசம்டா.. கொஞ்ச நேரம்.." " ம்ஹூம்... போடுங்கப்பா.. கொஞ்ச தூரம் தானே வீட்டுக்குப் போய் கழற்றிட்டு ரெஸ்ட் எடுக்கலாம்..." வேறு வழியே இல்லை. சரியாகத்தானெ சொல்கிறாள். மண்டையை மீண்டும் மாட்டிக் கொண்டேன்.


சம்பவம் # 2 :

வழக்கத்துக்கு மாறாக நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தேன். மதிய வேளை. பாரதியுடன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு மொட்டை மாடிக்குப் போனேன். ஒரு அகண்ட பிளாஸ்டிக் பாத்திரத்தை எடுத்துக் கழுவி மேலே கொண்டு போகும்போது எதற்கு எதற்கு என கேட்டபடியே இருந்தாள் கேள்வியின் நாயகி. பறவைகளுக்கு நீர் வைக்க என்று பதில் சொன்னேன். பறவைகளுக்கு நாம் எதற்கு நீர் வைக்கனும். வைத்தால் வந்து குடிக்குமா? என்றாள். கோடைக்காலமல்லவா பறவைகளுக்கு நீர் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது பாவம் பறந்து பறந்து தேடும். இந்த வழியா பறந்து போறப்ப பார்த்தால் வந்து மகிழ்ச்சியாகக் குடித்துக்கொள்ளும் என்று சொன்னேன். சந்தோஷத்தில் துள்ளியவள், வேகமாக கீழே வீட்டுக்குள் ஓடினாள். விளையாடப் போகிறாள் என்று நினைத்த நான் தண்ணீரை பாத்திரத்தில் நிரப்பிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் இன்னொரு சின்னக் கிண்ணத்துடன் ஓடி வந்தாள். என்ன இது என்றதும்.. பறவைகளுக்கு தண்ணீர் வச்சுட்டீங்க. சாப்பாடு யார் வைப்பா.? என்று கேட்டபடி கிண்ணம் நிறைய அரிசியைக் கொண்டுவந்து வைத்தாள். மிக்க மகிழ்ச்சி. தண்ணீர் வைத்துவிட்டு கீழே வந்தபிறகு முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தாள் அதுவும் வழக்கத்தினும் அதிகமாக. ஏண்டா என்று கேட்டால் சிரித்துக் கொண்டே சொல்கிறாள் . உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா என்று... அடடே....

ஞாயிற்றுக்கிழமை ஒரு பறவையும் வரவில்லை. சாயங்காலம் இரண்டு முறை போய்ப் போய்ப் பார்த்துவிட்டு சோர்ந்து திரும்பினோம். 

திங்கட்கிழமை அலுவலகம் முடிந்து இரவு வீட்டுக்குப் போனதும் வேகமாக ஓடி வந்து அப்பா வாங்க மேல போகலாம் என்று உடை மாற்றக் கூட விடாமல் கூட்டிக் கொண்டு படிகளில் தாவி ஏறினாள். 
இன்று பறவைகள் வந்திருந்தன ஆங்காங்கே தண்ணீர் தொட்டி மேலே பறவைகளின் எச்சங்கள். தண்ணீரிலும் எச்சங்கள். அரிசியும் பாதி கணவில்லை. ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் எனக் கத்தினாள். மகிழ்ச்சியில் நானும் ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என அவளை உற்சாகப் படுத்திவிட்டு, பாத்திரத்தைக் கழுவி நீர் நிரப்பிவிட்டு வந்தோம். 

நீதி :

நண்பர்களே.... எந்த நல்ல காரியத்தையும் குழந்தைகளின் முன்னால், அவர்களை உடன் வைத்துக் கொண்டே செய்யுங்கள். அவர்களுக்க்கான செயல்முறைக் கல்வியாகவும் நல்ல அனுபவமாகவும் அது இருக்கும்.

சூழ்நிலையின் காரணமாக ஏதாவது பிசகிச் செய்ய வேண்டி வந்தால் அதை அவர்கள் முன் செய்ய வேண்டாம். ஆழப் பதிந்துவிடும்.

அவ்வளவுதான்....

திங்கள், 7 ஏப்ரல், 2014

இந்த வார ஆனந்தவிகடனில் எனது கவிதைகள்



--
நட்புடன்,
இரா.பூபாலன்
 
செல்பேசி :9842275662