வியாழன், 31 ஜனவரி, 2013

பொங்கலோ பொங்கல்

"உழவையும் தொழிலையும் நிந்தனை செய்வோம் "

மறுபடியும் படிக்க வேண்டாம். சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது . உலகின் மிகச் சிறந்த, ஆகத்தகுதியான விவசாய நாட்டின் இன்றைய நிலையைத் தான் இப்படி எழுதியுள்ளேன்.

விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததோடு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளின் பசிக்கு அட்சய பாத்திரமாய் இருந்த ஒரு தேசத்தின் இன்றைய நிலை என்ன.? விவசாயம் செழிப்பாக உள்ளதா.? விவசாயி சிறப்பாக வாழ்கிறானா.?

                              " இல்லை "

ஏன்.?

விவசாயம் செய்ய மழை இல்லை

விவசாயம் செய்ய நிலம் இல்லை

விவசாயம் செய்ய விவசாயி இல்லை

விவசாயிக்கு வருமானம் இல்லை

எல்லா இல்லைகளும் இறுக்கிப் பிடிக்க, இல்லையென்று ஆகிக் கொண்டிருக்கிறது விவசாயியின் வாழ்க்கை.

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட இந்த தேசத்தின் பசுமை கருகி கான்கிரீட் காடுகளாக உருமாறிப் போக காரணம் / காரணங்கள் யாவை.?


  • மரங்களையும், காடுகளையும் பல்வேறு காரணங்களையும் காட்டி அழித்து அழித்து மழை வளத்தைக் குறைத்து விட்டோம்.

  • மழை குறைந்து , பயிர் கருகி விவசாயம் பொய்த்து, விவசாயியைப் பிழைக்க விடாது செய்து விட்டோம்.

  • விவசாய நிலங்களையெல்லாம் கூறு போட்டு அடுக்கு மாடிக் கட்டிடங்களாக உருமாற்றி விட்டோம்.

  • விவசாயிகளின் சந்ததியினர் கூட விவசாய நாட்டமில்லாத போது, மற்றவர்களும் அவ்வழியே வந்து விட்டோம்.

  • இடைத்தரகர்களும் , வியாபாரிகளும் கொழுத்த லாபம் பார்க்க, கொள்முதலையே திரும்ப எடுக்க முடியாமல் உழுபவனை வெறுங்கையுடன் நிற்க வைத்தோம்.

  • ஒரு விவசாய நாட்டில், விவசாயத்திற்கான தொலை நோக்குத்திட்டத்தை ( கண்துடைப்புக்குக் கொண்டு வரப் பட்டவை கணக்கிலில்லை ) வகுக்காமல் விட்டு விட்டோம்.

  • நியாயமாக, சரியாகக் கிடைக்க வேண்டிய நீரையே சகோதர முறை கூட தர மறுக்க, வேடிக்கை பார்த்தோம்.

  • காலத்திற்கேற்ப விவசாயத் துறையிலும் அறிவியல் நுட்பங்களைப் புகுத்தி உற்பத்தியைப் பெருக்கத் தவறி விட்டோம்.

  • சரியான திட்டமிடலோ , வழி நடத்துதலோ, ஒரு நிலைப் படுத்துதலோ என வேளாண் துறையை முறையாக கவனிக்காது விட்டு விட்டோம்.

  • சொல்லவே வேண்டாம், இருக்கும் சில திட்டங்களிலும் அரசியலையும் . ஊழல்களையும் உட்புகுத்தி வளர்ச்சியை மட்டுப் படுத்திவிட்டோம்.

  • மழை பெய்தாலும் , பெய்த நீர் வழிந்தோடுவது தார் சாலைகளிலும் சாக்கடை நதிகளிலுமே. மழை நீர்த் தேக்கங்களான குளம்,குட்டை, ஆறு யாவற்றையும் ஆக்கிரமித்து விட்டோம் நம் பேராசையின் பெரு வாழ்வுக்கு.

இவை நம் சிற்றறிவுக்கு எட்டிய, நமது வெறுங் கண்களுக்குப் புலப்பட்ட சில காரணங்கள். சூழலியல் ஆர்வலர்களையும், நிபுணர்களையும் கேட்போமானால் நமக்குக் கிடைப்பவை ஒரு புத்தகம் முழுக்கக் காரணங்களாயிருக்கும்.

எப்படியோ, இன்றைய நிலை.? நாளொரு விவசாயி, வாழ வழியின்றி தற்கொலை செய்து இந்த தேசத்தின் முகத்தில் ரத்தக் கறையைத் தோய்த்து விடும் பரிதாப நிலைக்குத் தௐள்ளப்பட்டுள்ளோம்.


குடும்பம் குடும்பமாக , குலத்தொழிலை விட்டு அடிமை வாழ்வு வாழவும் , பஞ்சம் பிழைக்கவும் தன் மண்ணை விட்டு புலம் பெயர்தல் இன்னும் நடப்பில் இருப்பது நமக்கெல்லாம் வேதனை.

மனம் முழுக்க பாறையின் கனத்துடனும், எதிர்காலம் குறித்த கவலையுடனும், அடுத்த தலை முறையின் வாழ்வு குறித்த அதீத மனக் குழப்பத்துடனுமே இக் கட்டுரை.

இப்படியான இறுக்கமான சூழ்நிலையில் வந்திருக்கிற உழவர் திருநாளில் யாருக்கு வாழ்த்து சொல்லுவது ? யார் கொண்டாடுவது ?

மிஞ்சியிருக்கும் உழவர்களான கடவுளர்களுக்கும் , அவர்கள் விளைவித்ததை உண்டுவிட்டு உழவர் திருநாளில் உலகத் தொலைக் காட்சி வரலாற்றில் முன்னூறாவது முறையாக தனது பண்டிகையை எந்தப் பிரக்ஞையுமற்று தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் கொண்டாடும் நம்மைப் போன்ற் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் , உழவர் திருநாள் நல்வழ்த்துக்கள்.


நன்றி : கருந்துளை சனவரி - பிப்ரவரி '2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக