ஞாயிறு, 28 மே, 2017

மீன்கள் பறக்கும் வானம்

மீன்கள் பறக்கும் வானம்

- ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பை முன்வைத்து

( நான்காவது கோணம் - ஏப்ரல் மாத இதழில் வெளியானது )
கவிதை மனநிலையின் மைய இழைகளை எப்போதும் சில கண்ணிகள் இணைத்தபடியே இருக்கும். அந்தக் கண்ணிகளின் வடிவங்கள் ஒவ்வொரு காலத்திலும் மாறிக்கொண்டே இருப்பன. நம் காலத்தில் அது ஒரு குழந்தையாகவும் நிற்கிறது.

பொதுவாகவே நாம் நம் குழந்தைகளைக் குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. நம் கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாக, நமது எதிர்காலத்துக்கான முதலீடாக, உற்பத்திக்காரர்களாக, நமது கட்டளைகளுக்குக் கீழ் படிந்து நடக்கும் நம் சேவகர்களாக, பிராய்லர் கோழிகளாக என பல்வேறு வடிவங்களில் அவர்களைக் காணுகிறோம்.

கவிஞர் ந.பெரியசாமியின் குட்டி மீன்கள் நெளிந்தோடும் நீலவானம் கவிதைத் தொகுப்பு குழந்தைகளைக் குழந்தைகளாகக் கண்ட கவிதைகள். குழந்தைகளின் அழகியல் தருணங்களைப் பதிவு செய்த கவிதைகள் நிறைந்த ஒரு தொகுப்பு.

குழந்தைகளையும் அவர்களின் குழந்தைமையையும் இழக்கத் துவங்கும் பருவம் ஒன்றுண்டு. அது அவர்கள் பள்ளிக்குச் செல்லும் பருவம். அரசுப்பள்ளிகளில் கூட பெரிய ஆபத்தில்லை. அங்கெல்லாம் இன்னும் ஓட்டாங்கரம் , கபடி, கோ கோ, நொண்டி என இணைந்து விளையாடுகிறார்கள். காக்காக் கடி கடித்து ஒரே மாங்காயைப் பகிர்ந்துண்ணுகிறார்கள்.. ஆனால் இந்தத் தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வளவு பாவப்பட்டவர்கள். ஆண்டொன்று ஆவதற்குள் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.

பள்ளி வளாகத்துக்குள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும், தின்பண்டங்களையும் உணவையும் யாரிடமும் பகிராமல் கீழே மேலே சிந்தாமல் உண்ண வேண்டும், விளையாட்டெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் ஒரு மணி நேரம் அதுவும் கணினி முன் அல்லது அறைச்சுவர்களுக்குள் என படிப்படியாக சிறகுகளைக் கத்தரித்து நடக்கவும் ஓடவும் மட்டுமே பழக்கத் தொடங்கிவிடுகிறார்கள் பறக்கத் தெரிந்த பறவைகளை.

இப்படி பிராய்லர் கோழிகளாக, பலன்களுக்காக மட்டுமே லாப நோக்கில் வளர்த்தப்படும் குழந்தைகள் தங்களது குறும்புகளை, விளையாட்டுகளை, குழந்தைத் தருணங்களை என யாவற்றையும் இழந்து விடுவதில் என்ன பிழை நேரப்போகிறது.


பள்ளிக்கூடம்

அடிக்கடி நீரிலிட்டு
புதிது புதிதாக சோப்பு வாங்க
பூனை மீது பழி போடுவாள்

விருந்தினரின் செருப்புகளை ஒளித்து
புறப்படுகையில் பரபரப்பூட்டி
நாயின் மீது சாட்டிடுவாள்

தேவைகளை வாங்கிக் கொள்ள
உறுதியளித்த பின் தந்திடுவாள்
தலையணை கிழித்து மறைத்த
ரிமோட்,வண்டி சாவிகளை

கொஞ்ச நாட்களாக 
குறும்புகள் ஏதுமற்றிருந்தாள்

மாதம் ஒன்றுதான் ஆகியிருந்தது
அவளை பள்ளிக்கு அனுப்பி

பள்ளிக்கூடங்கள் அப்பட்டமான வதைக்கூடங்களாகிவிட்டன என்பதற்கான நிகழ்கால சாட்சியாய் நிற்கிறதிந்தக் கவிதை.

குழந்தைகள் தங்கள் ஓவியங்களின் மூலம் உயிர்களைப் பிறப்பிக்கிறார்கள், இயற்கையை சிருஷ்டிக்கிறார்கள். அது கோணல் மாணலாக இருந்தாலும் ஒரு அழகுடன் இருக்கிறது. ஒரு வரையறுக்கப்பட்ட ஒழுங்குடன் அந்த ஓவியம் இருப்பதில்லை ஆகவே அது எக்காலத்துக்குமான நவீன ஓவியமாகிறது.அதன் புள்ளிகளில் , கோடுகளில், கிறுக்கல்களில் உயிர்ப்பானது ஓவியம் மட்டுமல்ல இந்தக் கவிதையும் கூட


அருவி

இறுக மூடினான்
முன்பின் கதவுகளை
திரைச்சீலைகளால் மறைத்தான்
ஜன்னல்களை
துவட்டிக்கொள்ளவென
துண்டுகளைக் கொடுத்தான்
அவனது அடுத்த கோமாளித்தனமென
பரிகசித்துக் கொண்டிருக்கையில்
சாரலில் நனையத் துவங்கினோம்

சித்திரத்தில் பிறப்பித்திருந்தான்
அருவியை 


இவரது கவிதைகளில் இருப்பதெல்லாம் குழந்தைத் தருணங்கள் தாம். அவை தரும் அனுபவங்கள் அந்தத்தக் கணத்துக்கான கொண்டாட்டங்கள். குழந்தைகள் நமது வானின் நட்சத்திரங்கள். நமது வானத்தை ஒளியூட்டி வருபவர்கள். அவர்களல்லாது நாம் ஒரு வானம் என்று யார் அடையாளப்படுத்துவது ? சொல்லப்போனால் அவர்களால் தான் நாம் வானமாக இருக்கிறோம் .

நட்சத்திரம்

நுழைந்ததும்
காத்திருந்தார் போல் இழுத்தான்
அறையுள் கலர்
கலராக நட்சத்திரங்கள்
அறிமுகப்படுத்துவதாக
நீண்ட பெயர்ப்பட்டியலை வாசித்தான்
வானில் இருத்தல் தானே 
அழகென்றேன்
எங்க டீச்சர் சொல்லிட்டாங்க
அதெல்லாம் கோள்களாம்
அப்போது பூமியிலிருந்து
ஒரு நட்சத்திரம்
வானுக்குத் தெரிகிறது

குழந்தைகளைக் கடவுளாக்கிக் கவிதையாக்குவது தொன்று தொட்டு நாம் செய்வது தான். அப்படியான கவிதைகளிலெல்லாம் குழந்தைகளின் சிறு செயல்களெல்லாம் வரங்களாக்கி படைப்புகளாக்கப்படும். ந.பெரியசாமியும் அதைச் செய்திருக்கிறார். கொஞ்சம் தனித்த தன்முத்திரையுடன்


எளியவர் என் கடவுள்

ஈரமாக்கியது நீதான்
குற்றச்சாட்டோடு எழுவார்

சமாதானம் கொள்வார்
எட்டணா சாக்லேட்டுக்கும்
மெனக்கிடாத பொய்களுக்கும்

சிறு அறைதான்
சிங்கம் உலாவ 
பெரும் வனமாகவும்
மீனாக துள்ளிட ஆறாகவும்

பூங்காக்களில் சறுக்கும் 
பலகை போதும்
புன்னகை சிறகு விரிக்க

வடை தூக்கும் 
காக்கைக் கதையில்
உறக்கம் கொள்ளும்
என் கடவுள் எளியவர்

நெற்றியில் பூசும் திருநீறுக்கே
மலையேற்றம் கொள்ளும்
என் குடிசாமி போல

கடைசி வரிகள் இதை ஒரு குழந்தைக் கவிதை என்று மட்டும் அடையாளப்படுத்தாமல் எளிய மனிதர்களின் வாழ்வியலை, அவர்களது எளிய கடவுளின் வழியாகச் சொல்கிறது.


குழந்தைக் கவிதைகளின் தொகுப்பென்ற வகையில் இது வழக்கமான தொகுப்பு தான். ஆனால் இந்தக் கவிதைத் தொகுப்பின் கவிதைகள் வழக்கமான கவிதைகள் அல்ல. இது நவீன பிள்ளைத் தமிழ். இவை குழந்தைகளை அறிவுறுத்தாத அச்சுறுத்தாத மொழியில் பேசுகிறது. மேலும், குழந்தைகளுக்கு மாறுவேடம் எல்லாம் போடாமலும், அவர்களைக் கடவுளாக்காமலும் இயல்பான குழந்தைமையைக் கவிதையாக்கியிருக்கிறார்.

இது முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகம் ; நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும், இந்தக் கவிதைகளையும்


ஆசிரியர் :  ந.பெரியசாமி
வெளியீடு : தக்கை , 15, திரு.வி.க சாலை, அம்மாப்பேட்டை, சேலம் 3
தொடர்புக்கு : 9487646819

நன்றி : நான்காவது கோணம் மாத இதழ் , கவிஞர் ஸ்ரீபதி பத்மநாபா


மேலும் ஒரு விருது

நண்பர்களுக்கு வணக்கம்,

ஒரு மகிழ்ச்சியான செய்திப் பகிர்வு ...

எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பான ஆதிமுகத்தின் காலப்பிரதி நூலுக்கு 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான இரண்டாம் பரிசை அறிவித்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் நாங்கள் இலக்கியகம் அமைப்பு.

இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இயங்கி வரும் கலை இலக்கிய சிந்தனையாளர் மன்றமும், மேல்சாத்தம்பூர்  கருப்பசாமி நினைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய பரிசுப் போட்டியில் வென்றிருப்பதில் மகிழ்ச்சி.

எனது ஆதிமுகத்தின் காலப்பிரதிக்கு இது இரண்டாவது விருது, முன்னர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதை நூலுக்கான கவிஞர் கே.சி.எஸ் அருணாச்சலம் நினைவுப்பரிசையும் வென்றுள்ளது என்பது பின் குறிப்பு.

நாங்கள் இலக்கியகத்துக்கும், தேர்வுக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.
எப்போதும் உடன் இருக்கும் நண்பர்களுக்கும், பொள்ளாச்சி இலக்கிய வட்டத்துக்கும் என் அன்பு ...

செவ்வாய், 9 மே, 2017

கோடைக் குழந்தைகள் ...

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை ... 

கோடைக் குழந்தைகள் ...

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. காலியாக இருந்த வீடு குழந்தைகளால் நிறையப்போகின்றது . குழந்தைகளைச் சமாளிப்பது பெரிய வேலையாயிருக்கிறது இப்போதெல்லாம். அவர்கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது, அவர்களது குறும்புகளை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கான கோடை வகுப்புகளைத் திட்டமிட வேண்டியிருக்கிறது, எங்காவது சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்பப்பா எத்தனை கவலைகள்.

நமது குழந்தைப் பருவம் இப்படி இருக்கவில்லை. விடுமுறை நாட்கள் என்பது பெரிய எதிர்பார்ப்புதான் என்றாலும் மற்ற நாட்கள் பெரும் பாரமாகவெல்லாம் இல்லை. அப்போதும் விளையாட்டு குதூகலத்துக்குப் பஞ்சமில்லாமலே இருந்தது.

பொள்ளாச்சி ஆனைமலைக்கு அருகில் உள்ள பெத்தநாயக்கனூர் நான் பிறந்த ஊர். அப்பா, அம்மா இருவரும் வேலைக்குச் சென்றுவிடுவார்கள்.

வீட்டில் அப்பத்தா, ஆத்தா என நிறைய பாட்டிகளும், பக்கத்து வீட்டுப் பாட்டிகளும் இருந்ததால் வீட்டிலேயே எப்போதும் விளையாடியபடி இருப்போம் அவர்களுடன்.

தாயம்,பல்லாங்குழி, உமிக்காசு, ஆடுபுலி ஆட்டம் தான் பிரதானமான ஆட்டங்கள். தாயத்தில் கரம் போட்டு விளையாடுவது, வெட்டாட்டம்,  பரமபதம், காசு கட்டி தாயத்துக்கு ஆடுவது என பல கிளை விளையாட்டுகள் உண்டு. பல்லாங்குழியிலும் 12 முத்து, ஆறு முத்து, ஒன்னு விட்டு ஆட்டம் என பல கிளைகள். விடுமுறை நாட்களின் மாலைப்பொழுதுகளிலும், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரியில் இரவு விடிய விடிய கிழவிகளுடனும் அம்மா, அக்காக்களுடனும் விளையாடுவோம்.

அந்தச் சமயங்களில் கிழவிகள் சொல்லும் கதைகளும், சொலவடைகளும் அற்புதமானவையாக இருக்கும். ஊர்க்கதைகள், நீதிக்கதைகள், பேய்க்கதைகள், மந்திரக்கதைகள் எல்லாம் அவர்களது ஏற்ற இறக்கமான குரலில் கேட்டுக்கொண்டே விளையாடியது பொற்காலம்.

ஆடத்தெரியாதவ வீதி கோணல்னு சொன்னாளாம், அண்டப்புளுகன் காட்டுல கடுகு மொடாச்சோடாமா ( அண்டப்புளுகன் தன் காட்டில் கடுகு பானையின் அளவுக்கு இருக்குனு புளுகுவான் ), போன்ற கிராமியச் சொலவடைகளையும், ஊர்வம்புக் கதைகளையும் கேட்ட படி அவர்களுடன் விளையாடி மகிழ்ந்திருக்கிறோம்.

வீட்டிலேயே பக்கத்து வீட்டு சிறுவர்கள், சிறுமிகள் கூடிவிடுவார்கள், டிரிங் டிரிங்.. யாரது? பேயது என்னா வேணும்? நகை வேணும் என்ன நகை? கலர் நகை என்னா கலர்? என்ற  உரையாடலில் பேயானவன் ஒரு நிறத்தைச் சொல்லுவான் அந்த நிறத்தை மற்றவர்கள் ஓடிப்போய்த் தொட்டுக்கொள்ள வேண்டும், தொடாதவர்களை பேய் தொட்டால் அவுட்.  வெள்ளை கலர் என்று சொன்னால் ஒருத்தன் பல்லைத் தொட்டுக்கொண்டு நிற்பான், அவனை பேய் தொட்டுவிட்டு நீ அவுட்டுடா உன் பல்லு வெள்ளை கலர் இல்லை மஞ்சள் கலர் என்று போங்காட்டம் ஆடுவோம்.. இப்படியான விளையாட்டுகள் திரும்பத் திரும்ப எத்தனை முறை விளையாடினாலும் அலுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குதூகல அனுபவம் கிடைக்கும்.

மாலை நேரங்களில் கிழவிகளுடன் விளையாட்டு எனில் விடுமுறை தினத்தின் பகல் நேரங்களில் பள்ளிக்கூட மைதானம் தான் கிடை.
வீட்டுக்கு அருகிலேயே பள்ளிக்கூடம் என்பதால் காலை சாப்பாடு முடித்தவுடன் கிளம்பி விளையாடப்போனால் மதியம் தான் வீடு திரும்புவோம் சில சமயங்களில் விளையாட்டு சுவாரஸ்யத்தில் மாலை ஆகிவிடும். உணவை மறந்து விளையாடிக்கொண்டிருப்போம். பையன்கள் பிள்ளைகள் என்ற பாகுபாடில்லை. அனைவரும் கூடுவோம்.

பையன்கள் மட்டுமெனில் கில்லி, பட்டம் விடுதல், மச பந்து, ஐஸ் பந்து என விளையாட்டு களை கட்டும்.
பிள்ளைகளும் சேர்ந்து கொண்டால், கோ கோ, நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, என விளையாட்டின் வண்ணம் மாறும்.
கபடி விளையாடுவோம். சிலை விளையாட்டு விளையாடுவோம்.
பல சமயங்களில் மண்ணில் புரண்டு அழுக்காகி, சட்டை கிழிந்து வீடு திரும்பிய கதையெல்லாம் உண்டு.

பள்ளி வளாகமெங்கும் வேப்பமரங்கள் பூத்துக்குலுங்கும். வெயிலின் கொடுமை துளியும் தெரியாது. இயற்கையாகவே பொள்ளாச்சி குளுமையான ஊர். எப்போதும் சில்லென்று தான் இருக்கும். எங்கள் பள்ளி மைதானத்தில் சுற்றிலும் மரங்கள் என்பதால் வெயிலின் தாக்கமோ, களைப்போ இருந்ததில்லை எங்களுக்கு. பசித்தால் வேப்பம் பழங்கள் தான் சமயங்களில் தின்பண்டம்.

அதுமட்டுமல்லாது, அங்கு கிடக்கும் வேப்பம் கொட்டைகளைப் பொறுக்கி அண்ணாச்சி கடையில் போட்டால் ஒன்றோ இரண்டோ ரூபாய்கள் தேறும். அதற்கு நெல்லிக்காய் , வத்தல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு டவுசரில் துடைத்துக்கொண்டு விளையாட்டைத் தொடர்வோம்.

களிமண்ணை எடுத்து வந்து நாங்களே சமையல் சாமான்கள் செய்வோம், சட்டி பானை, அடுப்பு, கரண்டி எல்லாமே களிமண்ணில் நேர்த்தியாக தயாராகும். களிமண் காய்வதற்குள் வித விதமாக பூக்கள், இலை தழைகள் பறித்து வந்து வைப்போம். அதில் சமையல் நடக்கும். நான்கைந்து குழுவாக பிரிந்து இதைச் செய்வோம். ஒரு குழுவுக்குக் குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பாள். வண்ண வண்ணமாக வித விதமாக சமையல் தயாராகும். அழகாக ( கவனிக்க சுவையாக அல்ல) சமையலைத் தயாரித்த குழுவுக்கு குச்சி ஐஸ் அல்லது கலர் சோடா பரிசு.

இப்போதெல்லாம் இந்த மாதிரியான விளையாட்டுகளுக்கு ஏங்குகிறேன். நம் பிள்ளைகளாவது விளையாடுவார்களா எனப் பார்க்கிறேன். நவீன விளையாட்டுகளிலும், கணினி, அலைபேசித் திரை விளையாட்டுகளிலும் தான் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

நமது மரபான கிராமிய விளையாட்டுகள் நமக்குத் தந்த உடல் பயிற்சியையும், மனப் பயிற்சியையும் இந்த விளையாட்டுகள் ஒரு போதும் தந்துவிட முடியாது. மண்ணில் புரண்டு விளையாடி நாம் மண்ணோடு மண்ணாக இருந்தோம். இப்போது நமது பாதங்கள் மண்ணில் பதிவதே இல்லை. மண்ணை விட்டு வெகுதூரம் வந்துவிட்டோம். சொந்த ஊரிலேயே அகதிகளைப்போல.

நாமும் அவர்களை சும்மா இருக்க விடுவதில்லை. ஒரு மாதம் விடுமுறையா ? மாலையில் இந்தி அல்லது ஃப்ரெஞ்ச் வகுப்பு, வார இறுதிகளில் கராத்தே குங்பூ வகுப்புகள். பத்தாவது அல்லது பன்னிரண்டாவது போகப்போகிறவர்கள் தீர்ந்தார்கள். அவர்களுக்கு விடுமுறையே கிடையாது படி படி என்று பந்தாடிவிடுவோம்.

கோடை விடுமுறை நாட்களிலாவது மற்ற நாட்களில் அவர்களுக்குக் கிடைக்காத சிலவற்றை நாம் அவர்களுக்குத் தரச் செய்யலாமே. கிராமங்களுக்கு அழைத்துச் சென்று உறவுகளுடன், மனிதர்களுடன் அவர்களைப் பழகச் செய்யலாம், விவசாயம் காடுகழனிகளை அறிமுகம் செய்யலாம். ஆற்றிலோ நீரோடையிலோ கொஞ்சம் ஆடச் செய்யலாம். சிறுவர்களைக் குழுமச் செய்து விளையாடச் செய்யலாம். நல்ல கதைப் புத்தகங்களைத் தந்து வாசிக்கச் செய்யலாம். வழக்கமான உணவுமுறைகளுடன் கொஞ்சம் கம்பு சாதம், பழைய சாதம், கம்பு , கேழ்வரகுக் கூழ், என கோடைக்கான சிறப்பு உணவுகளை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

குழுவாக குழந்தைகள் விளையாடுவதைத் தள்ளி நின்று சற்று பாருங்கள். பொறாமையாக இருக்கும். நாம் குழந்தையாகிவிட மாட்டோமா என்று தோன்றும். அந்த வாய்ப்பை, அந்த அனுபவத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்தித் தருவோம். குழந்தைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து பெரிய பெரிய மனிதர்களாவதெல்லாம் பிறகு.. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடலாம். இந்தப் பருவம் போனால் கிடைக்காது. ஒரு போதும் வளர்ந்த மனிதர்கள் குழந்தைகளாகிவிட முடியாது.


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

கோடைக் குழந்தைகள்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

உலக புத்தக தினம்

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம். உலகம் கொண்டாடும் நாடகங்களை எழுதிய ஷேக்ஸ்பியர் நினைவு தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உலக புத்தக தினமாக  அறிவித்துள்ளது.

புத்தகங்கள் - நம் நண்பர்கள், நம் ப்ரியத்துக்குரிய காதலிகள், நம் ஆலோசகர்கள், வலிநிவாரணிகள், தனிமைத் துணைகள், ஆசான்கள் இப்படி எல்லாமுமாக இருப்பவை.

வாசிப்பின் வசம் நம்மை ஒப்படைத்துவிட்டால் புத்தகங்கள் நம்மை வளர்த்துவிடும் நல்ல பெற்றோர்களைப் போலவே.

நான் எப்போது இருந்து வாசிக்கத் துவங்கினேன் ..?

நான்காம் வகுப்பிலிருந்து என்பது என் ஞாபகத்தில் இருப்பது. கிராமத்தில் புத்தகங்களை வீடு நிறைய அடுக்கி வைத்திருக்கும், தினமும் வேலைக்குச் சென்று விட்டு வரும் போதெல்லாம் கை நிறைய இதழ்களையும் புத்தகங்களையும் வாங்கி வரும் ஜெயபால் அண்ணனின் வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஆனந்தவிகடன், குமுதம், தேவி, ராணி என வார இதழ்களில் இருக்கும் குட்டிக் குட்டித் துணுக்குகள், கதைகள், நகைச்சுவைகளை வாசிப்பேன்.

பின்பொருமுறை காமிக்ஸ் பரிச்சயமானது. பிறகு சனிக்கிழமைகளில் பேப்பர் போடுபவர் தன் சைக்கிளில் தொங்கவிட்டபடி வரும் தினத்தந்தியின் லச்சினை அச்சிடப்பட்ட துணிப்பையிலிருந்து எடுத்துத் தரும் ராணி காமிக்ஸை வாங்க அவர் பின்னாலேயே ஓடுவேன். அதற்கான காசை வாரம் முழுதும் கிடைக்கும் பாக்கெட் மணியிலிருந்து சேமித்து டவுசர் பாக்கெட்டிலேயே வைத்திருப்பேன். மேலும், அண்ணாச்சி கடையில் பழைய காமிக்ஸ் பாதிவிலைக்குக் கிடைக்கும் அதையும் வாங்கிப் படிப்பேன். இன்னொரு அண்ணாச்சிக்கு நான் ராணி காமிக்ஸ் கொடுத்தால் அவர் அம்புலிமாமா அல்லது பூந்தளிர் மாதிரி பழைய புத்தகங்களைத் தருவார். இப்படி பண்டமாற்று முறையிலும் படிப்பேன்.

பெரியப்பா ஒருவர் டீக்கடை வைத்திருந்தார். வெள்ளிக்கிழமை சாயங்காலம் போனால் தினத்தந்திக்கு இணைப்பாக வரும் தங்க மலர் இதழை எடுத்து வைத்திருந்து தருவார். அதைப் படித்து முடித்துவிட்டு மறக்காமல் சனிக்கிழமை தந்துவிட வேண்டும்.

பின்னர், வார இறுதிகளில் செந்தில் மாமாவுடன் உறவினர் வீடுகளுக்கு அல்லது திரைப்படங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் அவருக்குப் பிடித்தமான பாக்யாவும் எனக்கு லயன், முத்து காமிக்ஸ் இதழ்களையும் வாங்கித் தந்துவிட இரண்டையும் இருவரும் மாற்றி மாற்றி பேருந்திலேயே படித்து முடித்துவிடுவோம்.

ஏழாம் வகுப்புக்கு வடக்கிபாளையம் எனும் கிராமத்தின் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். அப்பா,அம்மாவின் வேலையின் பொருட்டு. மிகவும் தனிமையான நாட்களை அது தந்தது. அந்தச் சமயத்தில் தான் அங்கொரு நல்ல நூலகமும் அதைவிடவும் அருமையான நூலகர் தாத்தாவும் கிடைத்தார்கள். நான் ஆர்வமாகப் போய் அவரிடம் விசாரித்ததும், என் தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் உறுப்பினாரன பின் , இரண்டு மூன்று நாட்களுக்கொருமுறை அங்கு புத்தகங்களை எடுத்து வந்து வாசிப்பேன். நூலகர் மிகுந்த ஆர்வமாக புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்க எடுத்துத் தருவார். ஈசாப் நீதிக் கதைகள், விக்ரமாதித்தன் கதைகள், 1001 அரேபியக் கதைகள், என மிகச் சிறந்த சிறுவர் நூல்களையும் அறிவியல் நூல்களையும் தந்து படிக்கச் செய்தார்.

அதன் பின்னர் பாரதியார் கவிதைகளில் நாட்டம் அதிகமாக, பின்னர் தான் கவிதைகளாகத் தேடித்தேடி வாசித்தது.

நடக்கும் போது, உட்காரும் போது, சாப்பிடும் போது, நள்ளிரவு வரை என வாசிப்பின் அத்தனை சுகங்களையும் அனுபவித்து வாசித்தேன். 

அப்போதெல்லாம் புத்தகங்கள் அதிகம் கிடைக்காது, இப்போது புத்தகங்கள் ஏராளம் கிடைக்கின்றன. வாசிக்க நேரமும் மனநிலையும் வாய்ப்பது தான் பெரும்பாடாக இருக்கிறது.

பெரும்பாலும் பரிசாகத் தருவது புத்தகங்களைத்தான். பரிசாக வருவதும் புத்தகங்கள் தாம். இது ஒரு ஆரோக்கியமான பழக்கம் என்றே நினைக்கிறேன்.

வாசிப்பின் மீதான தாகம் தான் எழுத்து வரைக்கும் கொண்டு வந்தது. அவ்வப்போது இதழ்கள் நடத்துவது, இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது, போன்ற அத்துணை முனைப்புகளின் மூல வேர் அதுதான்.

வாசித்தல் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமன்று. அது அதையும் தாண்டிய ஒரு அறிவார்ந்த செயல் என்றே நினைக்கிறேன். நம்மை செதுக்கிக்கொள்ள, நம்மை உணர்ந்து கொள்ள, நம்மைத் தற்காத்துக்கொள்ள நமக்கு  ஒரு கருவி.

நாம் திரை ஊடகத்துக்குத் தரும் அதீத முக்கியத்துவத்தை வேறெதற்கும் தராமல் போனதுதான் நாம் நம்மை கீழ்மைப்படுத்தத் துவங்கிய காலம். நாம் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களை நம்புகிறோம், அவர்கள் ரட்சகர்கள் என நினைக்கிறோம். திரைப்படங்களைப் பார்த்தே வளர்கிறோம். அதற்குத் தரும் முக்கியத்துவத்தில்  கொஞ்சம் கூட புத்தக வாசிப்புக்குத் தருவதில்லை. புத்தகங்களுக்குச் செய்யும் செலவு நம் அறிவின் மூலதனம் என நாம் முழுமையாக நம்புவதில்லை.  

இன்றும் யாவரும் கைவிட்டுவிடும் நிலையிலும் புத்தகங்கள் தரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் வேறெதுவும் தந்துவிட முடிவதில்லை.

குழந்தைகளை வாசிக்கச் சொல்வோம். காட்சிகள் தரும் கற்பனையை விட கதைகளும் புத்தகங்களும் தூண்டி விடும் கற்பனைகள் குழந்தைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கின்றன. 

வாசிப்போம், வாசிப்பு தரும் அழகிய உணர்வை, அது தரும் ஒரு துளி போதையை நேசிப்போம். 


உலக புத்தக தின வாழ்த்துகள்


வியாழன், 20 ஏப்ரல், 2017

குழந்தைகள் கலைக்கொண்டாட்டம் 2017

அன்புடையீர் வணக்கம்,

நமது பொள்ளாச்சியில் இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், முன்னணி இலக்கிய ஆளுமைகளை வருங்காலத் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் துவங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நடைபெற்று வருகிறது

மேலும் ஒவ்வொரு வருடமும் மே மாதம் குழந்தைகள் கலைக் கொண்டாட்டம் என்ற நிகழ்வை முழு நாள் நிகழ்வாக ஒருங்கிணைக்கிறோம்.. வரும் மே மாதம் 21 ஆம் தேதி சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழு நாள் கலை நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்நிகழ்வில் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும்

  • சிறுவர்களுக்கான கதை சொல்லல்
  • சிறுவர்களின் கதை சொல்லல்
  • பொம்மலாட்டம்
  • தொலைந்து போன கிராமத்து விளையாட்டுகள் அறிமுகம்
  • சிறுவர்களை ஓவியம் வரையச் செய்தல்
  • சிறுவர்களுக்கான இசை நிகழ்ச்சி
  • நாடகம்
  • விடுகதை
  • பாடல் இன்னும் பல...


இந்நிகழ்ச்சிக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் தங்கள் அருகில் உள்ள குழந்தைகளை அழைத்து வரலாம். அனுமதி இலவசம். மேலும், குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்கள் , உபகரணங்கள், பரிசுகள் வழங்கப்படும். மதிய உணவும் வழங்கப்படும். இந்நிகழ்ச்சிக்கு குறைந்த அளவே குழந்தைகளை வைத்து நடத்தும் திட்டம் உள்ளதால், முன் பதிவு அவசியம். குழந்தைகளின் வயது வரம்பு : 4 வயது முதல் 13 வயது வரை
விருப்பமுள்ளவர்கள், கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்பு எண்கள் : .அம்சப்ரியா - 90955 07547, இரா.பூபாலன் - 98422 75662

சென்ற வருட நிகழ்வின் சில நல்ல தருணங்கள் :


செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அடிவயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு

கொலுசு மின்னிதழில் நான் எழுதும் கட்டுரைத் தொடரான தேநீர் இடைவேளையில் இந்த மாதம் வெளியாகியிருக்கும் கட்டுரை 

தேநீர் இடைவேளை # 12     அடிவயிற்றில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு


பொட்டைப்புள்ளைய வெளிய அனுப்பிட்டு, வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்க வேண்டி இருக்கு

- இது கொஞ்ச நாட்கள் முன்பு வரைக்கும் வயதுப்பெண்களை வைத்திருக்கும் அம்மாக்களின் அன்றாடப் புலம்பலாக நம் காதுகளில் கேட்டிருக்கும். இப்போது அப்படி இல்லையா ? நிலைமை மாறிவிட்டதா என்றால் மாறிவிட்டது தான். நேரும் எதிருமாக மாறியிருக்கிறது. வயதுப்பெண்களை வெளியில் வேலைகளுக்கும் கல்விக்கும் அனுப்பலாம் என்ற தைரியம் வந்திருக்கிறது. இரவு வேலைக்கும் பெண் பிள்ளைகளை அனுப்பும் துணிச்சல் வந்திருக்கிறது. எதிரான மாற்றம் என்னெவெனில், அம்மாக்கள் இப்படிப் புலம்புவதுதான் இல்லையேயொழிய இப்போதெல்லாம் வயதுப் பெண்களை மட்டுமல்ல சிறுமிகளையும் குழந்தைகளையும் கூட வெளியில் அனுப்ப நாம் பயந்து தான் இருக்கிறோம்.

வெளியில் செல்லும் குழந்தைகளும் சிறுமிகளும் பெண்களும் வீடு திரும்பும் வரைக்கும் வீடே அடி வயிற்றில் நெருபபைக் கட்டிக்கொண்டு இருக்கும்படி ஆகிவிட்டது இன்றைய நாகரீக உலகம். சமீப நாட்களாகப் பெருகி வரும் குழந்தைகள் மற்றும் பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் நாம் மிகத்தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைக் கண்கூடாகக் காட்டுகிறது.

கடந்த சில நாட்களில் மட்டும் நம் கண் முன்னால் கொன்று வீசப்பட்ட உயிர்கள் எத்தனை எத்தனை.? சென்னையில் வசித்து வந்த ஏழு வயதேயான ஹாசினி என்ற குழந்தையை நான்கு நாட்களாகக் காணவில்லை என்று தேடிவந்த நிலையில் பைபாஸ் சாலையொன்றில் எரிந்த நிலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணையில், ஹாசினியின் அபார்ட்மெண்டில் பக்கத்து வீட்டுக்காரனாகக் குடியிருந்த ஜஸ்வந்த் என்ற இளைஞர் அக்குழந்தையைப் பாலியில் வல்லுறவு செய்து கொன்று எரித்துவிட்டது தெரிய வந்திருக்கிறது.

இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் மனம் நொந்த தருணத்தில் இன்னொரு அதிர்ச்சியான சம்பவம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்தேறியது.  அது சென்னை திருவொற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 3 வயது குழந்தை ரித்திகா, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது. மூன்று வயதுக் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை இந்தச் சமூகம். முதலில் இந்தக் கொலையை எதிர்வீட்டுப் பெண் ஒருவர் கொலுசுக்காகக் கடத்திச் சென்று கொன்றுவிட்டார் என்று தான் வழக்குப் பதிவு செய்து விசாரித்திருக்கிறார்கள்.


பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளுக்கு அவர்களின் உடை தான் காரணம் என்று பேசி வந்தவர்களின் முகத்தில் அறைகின்றன இப்படியான மரணங்கள். மூன்று மற்றும் ஏழு வயதுக் குழந்தைகளின் மீதான பாலியல் தூண்டலுக்கு எது காரணமாக இருக்க முடியும் ? அவர்களது உடலா, உடையா ?

அரியலூர் அருகேயுள்ள சிறுகடம்பூரைச் சேர்ந்த 16 வயது நந்தினி, டிசம்பர் 26 அன்று காணாமல்போனார். புகாரை போலீஸார் அலட்சியமாகக் கையாண்டிருக்கிறார்கள். தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் தந்த அழுத்தத்தின் விளைவாக நடவடிக்கைகள் தொடங்கி, ஜனவரி 14 அன்று கீழமாளிகை கிராமத்தில் ஒரு கிணற்றிலிருந்து நிர்வாண நிலையில் இந்தச் சிறுமியின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது.

கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரும் நந்தினியும் காதலித்ததாகவும் விளைவாக, நந்தினி கருவுற்றதாகவும் திருமணத்துக்கு அவர் அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், நந்தினியைத் தன்னுடைய பாலியல் வேட்கைக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் பழகிய மணிகண்டன், தனது நண்பர்கள் மணிவண்ணன், வெற்றிச்செல்வன், திருமுருகன் ஆகியோருடன் சேர்ந்து அவரைக் கொன்றதாகப் புகார் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நந்தினி கொல்லப்படுவதற்கு முன்பு, கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட நான்கு இளைஞர்களும் இப்போது கைதுசெய்யப் பட்டிருக்கிறார்கள்.

நந்தினி காணாமல்போய் 11 நாட்களுக்குப் பிறகுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது என்பதும், 20 நாட்களுக்குப் பிறகுதான் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது என்பதும் 20 நாட்களுக்குப் பிறகுதான் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதும் காவல் துறையின் அலட்சியப் போக்குக்கு ஓர் உதாரணம். சாதியம் சார்ந்து நாடு முழுவதும் நடக்கும் வன்முறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்கின்றனவே அன்றி குறையவில்லை.

பெண்களின் மீதான பாலியல் தொல்லைகளோடு சாதி, மத பின்புலத்தில் அவர்கள் நசுக்கப்படுவதும் இப்போது வெளிச்சமாகியிருக்கிறது. சாதியின் பெயரால் பெண்களுக்கு நடந்தேறும் வன் கொடுமைகள் நம்மை மேம்பட்ட நாகரீக சமூகத்திலிருந்து காட்டுமிராண்டிகளினும் கேவலமான இனமாக பின்னோக்கிக் கொண்டு சேர்க்கிறது.


இப்படி நாளைக்கு பல பெண்களும் குழந்தைகளும் சிதைக்கப்பட்டு நசுக்கப்படுகிறார்கள். டெல்லியில் நிர்பயாவுக்கு ஓடும் பேருந்தில் நடந்த வன்முறையின் பின்னர் நாடே கொந்தளித்ததன் விளைவாகவே கொஞ்சமேனும் தற்போது விழிப்புணர்வும், சட்டத் திருத்தமும் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாது, இப்போது இது மாதிரியான வன்கொடுமைகள் வெளிச்சமிட்டுக் காட்டப்படுகின்றன.

இன்றைய இளைஞர்களின் வாழ்வு முறையும் சுற்றுப்புறச் சூழ்நிலையும் அவ்வளவு ஆரோக்கியமானதாக இல்லை. கெட்ட தரவுகளும் , தவறான வழிகளும் எதிர்பார்த்ததைவிட அதிகம், எளிதில் கிடைக்கிறது. விளைவு செல்போனிலேயே ஆபாசப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். பள்ளிக் கல்வியிலும் பெண் சமத்துவத்துக்கான விழிப்புணர்வோ, பாலியல் குறித்த விழிப்புணர்வோ இல்லை. பள்ளிக் கல்வி முடித்து வெளிவரும் மாணவர்கள் , முழுமையான மனிதனாக வெளிவருவதற்கான கூறுகள் பாடத் திட்டத்தில் இல்லை. யோசிக்கவே விடாத மனத்தையும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அற்ற வக்கிர மனம் படைத்தவர்கள் கையில் நலிந்த குழந்தைகள் சிக்குகிறார்கள். விளைவு... ஆங்காங்கே நாம் கேள்விப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அரங்கேறுகின்றன. இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுபவர்களில்  பாதிப்பேரே தண்டனைபெறுகின்றனர். மீதிப்பேர் தப்பித்து விடுகின்றனர். தப்பு செய்யத் துணிபவர்களுக்கு, இப்படித் தப்பிப்பவர்கள் பற்றிய எண்ணமே வருகிறது. ஆகவே, தண்டனைகளும் கடுமையாக வேண்டும். சட்டதிட்டங்களும் கண்டிப்பாக வேண்டும்.

பள்ளிக் கல்வி , கல்லூரிக் கல்விகள் மட்டுமல்லாமல், குடும்பத்தில் கிடைத்துக் கொண்டிருந்த அனுபவக் கல்வியும் சிதைந்து விட்டது. நாம் கூட்டுக்குடும்பமாக இல்லை. கூட்டுக்குடும்பங்களில் பல்வேறு உறவுகளுடன் பெண்கள் இருப்பர். அவர்கள் மீதான மரியாதையான அன்பு மற்ற பெண்களையும் மரியாதையாகப் பார்க்கச் செய்யும். அது இல்லாமல் போய்விட்டது. மேலும், குடும்ப அமைப்பில் நாம் ஒட்டியிருப்பதில்லை. அதற்கும் அவசர உலகமும் தொழில்நுட்பமும் காரணமாகிவிட்டது. ஒரே வீட்டில் வசித்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாகவே வாழ்கிறோம். ஒன்றாக அல்ல.

உலகம் முழுவதுமே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வன்கொடுமைகளும் அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் அதிர்ச்சி தெரிவித்து இருக்கின்றன. ஸ்போர்ட் ரிச் லிஸ்ட் (Sport Rich Iist) ஆய்வறிக்கை, உலகில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகம் நடைபெறும் நாடுகள் எனப் பத்து நாடுகளைப் பட்டியலிட்டிருக்கிறது.முதலிடம் எந்த நாட்டுக்குத் தெரியுமா? பெண்ணுரிமையிலும் பெண் சுதந்திரத்திலும் முற்போக்கான எண்ணம் கொண்டது எனப் பலர் நினைத்திருக்கும் அமெரிக்காவில்தான் உலக அளவில் அதிகப் பாலியல் வன்முறைகள் நடக்கிறதாம். ஆனால், அதில் 16 சதவீதப் புகார்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன என்பது இன்னுமொரு அதிர்ச்சி. பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ராணுவத்தில் பணிபுரியும் பெண்களும் விதிவிலக்கல்ல. அவர்களும் பாலியல் அத்துமீறல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறதாம்.


மக்கள்தொகையில் மட்டுமல்ல, பெண்கள் மீது நிகழும் பாலியல் வன்முறைகளிலும் இந்தியாவுக்கே உலக அளவில் இரண்டாம் இடம். வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் தேசியப் பிரச்சினையாகவே இது விஸ்வரூபம் எடுத்துவிட்டது. நாட்டின் தலைநகரமான புதுடெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிக அளவில் நடக்கின்றன என அறிக்கை சொல்கிறது.

ஆண்கள் மனதில் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கமும், பெண்ணை ஒரு போகப் பொருளாக நினைப்பதும், ஆணுக்கு அடிமைத் தொழில் செய்வதற்கே பிறப்பெடுத்தவள் பெண் என்கிற கோளாறான கற்பிதங்களுமே பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைகளின் தோற்றுவாய். முறைப்படுத்தப்படாத சட்டங்களும் இதுபோன்ற கொடுமைகள் அதிகரிக்கக் காரணம். கடுமையான சட்டங்கள் இருந்தும் அவற்றைச் செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதமே போதும், குற்றவாளிகள் அடுத்த தவறைச் செய்வதற்கு.

இந்தியா ஒளிர்கிறது முன்னேறிக்கொண்டிருக்கிறது என பீத்திக்கொண்டிருப்பவர்களும், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா என இந்தியாவைத் தூக்கிப் பிடிக்க நினைப்பவர்களும் கவனம் செலுத்த வேண்டிய பகுதி இது.

ஊடக வெளிச்சங்களுக்கு வராமல் பணத்தாலும், பயத்தாலும், சாதி பிற காரணங்களாலும் இன்னும் நம் நாட்டின் மூலை முடுக்குகளில் தினம் ஒரு நந்தினியும் ஹாசினியும், ரித்திகாவும் கொல்லப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.  நாம் இதோ இந்த மார்ச் மாதத்திலும் மகளிர் தின விழா கொண்டாடிவிட்டு ஓய்ந்திருக்கிறோம். விடிவு என்பது நம் மனங்களில் இருக்கிறது. நாம் மனது வைத்தால் மட்டுமே இருக்கிறது.


கொலுசு மின்னிதழில் வாசிக்க :

http://kolusu.in/kolusu/kolusu_apr_17/index.html#p=26 

பாவம் நமது பாரதப்பிரதமர்

இந்தியத் தலைநகரில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் உச்சமடைந்துள்ளது.

நிவாரணம் வழங்குதல், விவசாயக் கடனை தள்ளுபடி செய்தல், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியிறுத்தி தமிழ் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராடி வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் அரசின் செவி சாயாததால் நேற்று தங்களது ஆடைகளைக் களைந்து முழு நிர்வாணப்போராட்டத்தை நடத்தியுள்ளார்கள்.


பிரதமர் அலுவலகம் எதிரே ஆடையின்றி சாலையில் உருண்டு போராட்டம்


மொட்டை அடித்து, மீசை மழித்து, கண்களைக் கட்டிக்கொண்டு , உண்ணாவிரதமிருந்து, எலிக்கறி பாம்புக்கறி உண்டு, மண்டையோட்டை அணிந்து கொண்டு  என எத்தனையோ விதங்களில் கவன ஈர்ப்பை நிகழ்த்தப் போராடி இயலாமல் கடைசியில் வந்தடைந்தது தான் இந்த நிர்வாணப் போராட்டம்.


இந்தியா எனும் மிகப்பெரிய சனநாயக நாட்டின் தலைநகரில் அதுவும் பிரதம மந்திரியின் அலுவலகத்தின் முன்பு நிர்வாணமாக நின்று போராடினால் என்னென்ன பின்விளைவுகள் வரும் என்று அவர்கள் அறியாமலா இருப்பார்கள். நாடே பார்க்கும், வீடும் பார்க்கும் என்பதைப் புரியாமலா இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் ஆடை அவிழ்க்கத் துணிந்தது அவர்களும் அவர்கள் வீட்டினரும் சொகுசாக வாழ்ந்து விடவா. அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்த அரசு கொட்டிக் கொடுக்கும் கோடிக்கணக்கான சலுகைகளில் சரி பாதி தங்களுக்கு வேண்டுமென்றா ?

அவர்களின் கோரிக்கை நியாயமானது. சில கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாமல் கூட இருக்கலாம். காது கொடுத்து ஒரு முறை கேட்கக் கூடவா முடியாது.?


நிதி அமைச்சர் சந்தித்தார், அலுவலர்கள் சந்தித்தனர் என்றெல்லாம் சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கத் தேவையில்லை. அவர்களது கோரிக்கை பிரதமரைச் சந்திப்பது.  நமது பிரதமர் நமது விவசாயிகளுக்காக கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு மணி நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கான நிலையிலா இருக்கிறார் ?

தொடர்ந்து இப்படியான புறக்கணிப்புகள் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களையும் அவர்களது தொழிலான விவசாயத்தையும் நாட்டுக்கே சோறிடும் விவசாயிகளையும் பெரும் அவமானத்துக்குள்ளாக்கும்.

நமது பிரதமரோ விமானத்தில் பறந்து , ஹெலிகாப்டரில் பறந்து சிலைகளைத் திறந்து வைக்கிறார், வெளிநாட்டு மந்திரிகள், அதிகாரிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார், அவர்களை ஆன்மீக தலங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கிறார் அவர்களுடன் அழகாக செல்பி எடுத்துக்கொள்கிறார் , யாரோ ஒரு யுவதி இவரது துப்பட்டா அழகு என்று இணையத்தில் புகழ சிரத்தையெடுத்து இவர் அந்தப்பெண்ணுக்கு அதை அனுப்பி வைக்கிறார்.

நமது பிரதமர் நாட்டு மக்களுக்காக ஓயாமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்... பாவம் அவருக்கு நேரமிருப்பதில்லை ..

பாருங்கள் , இதோ இப்போது கூட ஆஸ்திரேலிய பிரதமர் வந்து விட்டார் சுயமி எடுக்க வேண்டும், கோவில்கள், சுற்றுலா தலங்களைச் சுற்றிக்காட்ட வேண்டும், எத்தனை எத்தனை வேலைகள் உள்ளன. பாவம் அவரை விட்டுவிடுங்கள் ...